×

விபத்தில் காயமா? ஆட்டோ ஆம்புலன்ஸ் ரெடி!

நன்றி குங்குமம் தோழி

பிரசவத்துக்கு  இலவசம் என நம்மூர்களில் ஆட்டோக்களில் எழுதியிருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் தலைநகர் டெல்லியில் போக்குவரத்து போலீசாக இருந்த ஓய்வு பெற்ற ஒருவர் சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு இலவசமாக உதவும் வகையில் ஆட்டோ ஆம்புலன்ஸ் நடத்தி வருகிறார். விபத்தில் காயம் அடைந்தவர்களை  காப்பாற்ற கூட உதவாத ஆட்டோக்காரர்கள் இருக்கும் நிலை தான் தமிழகத்தில் உள்ளது.

‘ என்ன ஆக்சிடென்ட் கேஸா... நமக்கு எதுக்கு வம்பு’ன்னு தலைதெறிக்க ஓடும் ஆட்டோக்காரர்கள் மத்தியில் டெல்லியில் ஹர்சிந்தர் சிங் என்ற இந்த முதியவர் ஆட்டோ ஆம்புலன்ஸ் ஒன்றையே நடத்தி வருகிறார். டெல்லியின் முதல் ஆட்டோ ஆம்புலன்ஸ் என்ற பெருமை சிங்கின் ஆம்புலன்சுக்கு உண்டு. சாலை விபத்துக்களில் சிக்கி காயம் அடைந்தவர்கள் பற்றி தகவல் கிடைத்தால் உடனே முதல் ஆளாக தனது ஆம்புலன்ஸ் ஆட்டோவுடன் அங்கே
ஆஜராகி விடுகிறார் சிங்.

ஆட்டோ அங்கே வருவது மட்டும் இல்லாமல், விபத்தில் சிக்கியவரை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்து, காயத்துக்கு கட்டுப்போட்டு, தேவைப்பட்டால் மாத்திரைகள் கொடுத்து உதவுகிறார். தேவைப்பட்டால் அடிபட்டவரை அரசு மருத்துவமனைக்கும் அழைத்து செல்கிறார். இவை அத்தனையும் இலவசமாக ஒரு சேவையாக செய்து வருகிறார். இதனால் அவரது ஆட்டோ சத்தம் கேட்டாலே வாகனம் ஓட்டுபவர்கள் அவருக்கு வழிவிட்டு ஒதுங்கி விடுகின்றனர்.

பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்து தேவையான மருந்துகளையும் வாங்கி கொடுத்து விட்டு சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து விட்டு பிறகு தான் அங்கிருந்து செல்கிறார் சிங். 76 வயது ஆன இவர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து போனில் தகவல் கிடைத்தவுடன், தனது ஆட்டோவில் பயணிகள் இருந்தாலும், அவர்களை இறக்கி விட்டுவிட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து விடுகிறார்.

‘‘போக்குவரத்து காவலராக பணியாற்றியதால் எனக்கு தில்லியில் விபத்து நடக்கும் இடங்கள் அத்துபடி. அந்தப் பகுதிகளை அதிகாலையில் ஒரு விசிட் அடிச்சிடுவேன். அந்த சமயத்தில் யாராவது அடிபட்டு இருந்தால் அவர்களை மருத்துவமனையில் சேர்த்திடுவேன். என்னுடைய ஆட்டோவில் எப்போதுமே முதல் உதவிக்கான உபகரணங்கள் எல்லாம் இருக்கும். முதலுதவி செய்வது குறித்து பயிற்சியும் பெற்றிருக்கிறேன்.

எனது ஓய்வூதியம் எனது குடும்ப செலவுக்கு போதும். விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவுவதற்கு ஆட்டோவில் வரும் வருமானத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். விபத்தில் சிக்கியவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்பதால் அவர்களை விரைந்து காப்பாற்றி உயிர்பிழைக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதுவரை 200க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றி இருக்கேன்’’ என்கிறார் சிங்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்


Tags : accident , Accident Injury, Auto Ambulance, Ready
× RELATED விபத்தில் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி