×

சீர்காழி அருகே நிம்மேலியில் பழங்கால முறைப்படி வீடு கட்டும் விவசாயி

சீர்காழி: இயற்கை விவசாயி 100 ஆண்டுகளுக்கு முந்தைய முறையில் சேறு, சுண்ணாம்பு கடுக்காய் பனை வெல்லம் மட்டும் பயன்படுத்தி புதுமையாக வீடுகட்டி வருகிறார். மணல், சிமென்ட், கம்பிகள் இல்லாமல் கட்டப்பட்டு வரும் வீட்டை பலரும் ஆா்வத்துடன் பார்த்து செல்கின்றனர். சீா்காழி அருகே நிம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகா். இயற்கை விவசாயி இவர் நலம் பாரம்பரிய இயற்கை விவசாய அறக்கட்டளை செயலாளராக இருந்து வருகிறார். மேலும் இவர் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல். ஜெயராமன் ஆகியோரை பின்பற்றி பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கவும், இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை வழங்கி இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறார். இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் சீா்காழியில் ஆண்டுதோறும் நெல் திருவிழாவையும் நடத்தி இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட நெல் ரகங்களை காட்சி படுத்தி வருகிறார்.

மேலும் பாரம்பரிய அரிசி ரகங்களை பயன்படுத்தி செய்த உணவு வகைகளை கண்காட்சிகளுக்கு வருவோருக்கு வழங்கி இயற்கை முறையில் உணவு தயாரித்து சாப்பிடுவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இயற்கை முறையில் விளைவித்த பாரம்பரிய அரிசி ரகங்களை கொண்டு உணவு தயாரித்து சாப்பிட்டு வந்தால் எந்தெந்த நோய்கள் தீரும் என்பது குறித்தும் கண்காட்சியில் காட்சிப்படுத்தி வருகிறார். மேலும் இயற்கை விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோரை அழைத்து வந்து இயற்கை விவசாயம் குறித்து நெல் திருவிழாவில் பேசவைத்து வருகிறார். இயற்கை விவசாயி சுதாகர் தனது சொந்த கிராமமான நிம்மேலியில் முந்தைய காலங்களில் இயற்கையான பொருட்களைக் கொண்டு வீடு கட்டியது போல் வீடு கட்ட முடிவு செய்தார். இயற்கையான முறையில் வீடுகளைக் கட்டித்தரும் ராஜபாளையத்தை சேர்ந்த சிலரை அணுகி அவர்களை அழைத்துவந்து தனது வீட்டின் அருகே தங்கவைத்து அவர்களின் ஆலோசனை பேரில் வீடு கட்ட தொடங்கியுள்ளார்.

வீடு கட்டத் தேவைப்படும் முக்கியமான பொருட்களான மணல், கம்பிகள், சிமென்ட் ஆகியவற்றின் பயன்பாடு இல்லாமல் வெறும் சுண்ணாம்பு, சேறு ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி, தனது வீட்டை கட்டி வருகிறார் . இந்த வீட்டில் சுமார் 20 சதவீதம் மட்டும் சிமென்ட் மற்றும் கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுவும் லிண்டா், கழிவறை, கழிவறை தொட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 80 சதவீதமும் மணல், சிமென்ட, கம்பி இல்லாமல் கட்டப்பட்டு வருகிறது. வீடு கட்ட முடிவு செய்த சுதாகா், சீா்காழி சுற்றுவட்டாரத்தில் உள்ள இடிக்கப்பட்டுவரும் பழைமை வாய்ந்த கட்டிடங்களை தேடிச் சென்று அங்கிருந்து இடித்து அகற்றப்பட்ட பழைய செங்கல்கள், கருங்கற்களை சேகரித்து வைத்திருந்தார். பின்னா், பழமையான முறையில் வீடுகட்ட தெரிந்தவர்களை உடன் வைத்துக் கொண்டார். தற்போது வீடு கட்ட அஸ்திவாரத்திற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு அந்த மண் சேகரிக்கப்பட்டுள்ளது. அந்த மண்ணை நாள்தோறும் தண்ணீா் ஊற்றி, ஆட்களை வைத்து நன்கு மிதித்து, குழைத்து சேறு பக்குவத்திற்கு மாற்றி, கட்டுமானக் கலவைக்கு தயார்படுத்தி தினந்தோரும் வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்.

இதேபோல், சேறுடன் சோ்த்து கட்டுவதற்கு அரியலூா் பகுதியிலிருந்து ஒரு கிலோ ரூ.10 வீதம் சுண்ணாம்பை மொத்தமாக வாங்கி சேகரித்து வைத்துக் கொண்டனர் பின்னா் சேறு, சுண்ணாம்பு, கடுக்காய், பனைவெல்லம் ஆகியவற்றை பயன்படுத்தி வீடு கட்டத் தொடங்கி, தற்போது கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வீட்டிற்கான சுவா்கள் வைக்கும் பணிகள் முடிந்து மேற்கூரை ஒட்டும் பணியும் முடிவடைந்துள்ளது. மேற்கூரைகளை ஒட்டுவதற்கு பனை கட்டைகளை குறுக்கே வரிசையாக வைத்து அதன் மீது செங்கற்களை அடுக்கி கட்டப்பட்டுள்ளது வீட்டின் உள்ளே ஆர்ச் போன்ற கட்டுமானமும் பழமையான முறையில் நோ்த்தியாக செங்கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 4 ஆட்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். சிமென்ட், மணல், கம்பிகள் பயன்படுத்தி கட்டப்படும் வீட்டைக் காட்டிலும், இதற்கான செலவு 25 சதவீதம் குறைவு. இயற்கையான பொருட்களை கொண்டு பழங்கால முறைப்படி கட்டப்படும் வீடு பல ஆண்டுகள் நீடித்து நிற்கும் என்றும், வெயில் காலங்களில் வெயிலின் தாக்கம் சிறிதுகூட இருக்காது என கூறப்படுகிறது. இயற்கை முறையில் இயற்கையான பொருட்களை கொண்டு பழமையான முறையில் கட்டப்பட்டு வரும் வீட்டை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இது குறித்து இயற்கை விவசாயி சுதாகர் கூறுகையில், மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ்வதுதான் நியதி. அதனால்தான் நான் வசிக்கும் வீட்டையும் அந்த வகையில் கட்ட முன்வந்தேன். மணல் தட்டுப்பாடு கடுமையாக நிலவும் இந்தக் காலகட்டத்தில், இதுபோன்ற பழைமையான கட்டுமானம் மிகவும் உதவியாக உள்ளது. மணல் இல்லாமலும் வீடு கட்ட முடியும் என்பதை இதன் மூலம் பிறருக்கு எடுத்துரைக்கவுள்ளேன். சேறு கட்டுமானத்திற்கு தண்ணீா் தேவையும் அதிகம் இருக்காது. கம்பி, சிமென்ட் பயன்படுத்தி கட்டப்படும் வீடுகள், சுமார் 50 ஆண்டுகள் இடைவெளியில் சிதிலமடைந்தும், நீா் கசிந்தும் சேதமடையக் கூடும். ஆனால் சுண்ணாம்பு, கடுக்காய், சேறு ஆகியவற்றை பயன்படுத்தி கட்டப்படும் வீடுகள் ஆண்டுகள் செல்ல செல்ல உறுதித்தன்மை பெற்று பாறை கொண்டு இடித்தாலும் அசைக்க முடியாத கடினத் தன்மையைப் பெறும்.

எனது வீட்டில் ஏசி, குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்தக் கூடாது என தீா்க்கமாக உள்ளேன். பழைமையான இதுபோன்ற வீடுகள் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வீட்டின் சூழலை தகவமைத்துக் கொள்ளும். மழைக்காலங்களில் வீட்டின் உள்ளே கதகதப்பும், வெயில் காலங்களில் வீட்டின் உள்ளே குளிர்ச்சியையும் தரக்கூடியது. காய்கறி, பழங்களை பல நாட்கள் கெடாமல் வைத்திருக்க முடியும். இது மட்டுமன்றி வீட்டின் நிலைப்படி (அரிகாள்), ஜன்னல் மரங்கள் வைக்கும்போது அதன் நான்கு மூலைகளிலும் வாழை இலை, தாமரை இலை ஆகியவற்றை வைத்து சேறு பூசியுள்ளோம். இதனால் மண்ணிலிருந்து வரும் கரையான் போன்ற பூச்சிகள் மரங்களை அரிக்காது.இந்த முறையில் கட்டப்பட்ட வீடுகளை பல நூற்றாண்டுக்கு பிறகும் செங்கல், செங்கலாக பிரித்தெடுத்தும், அரிகாள், ஜன்னல் மரங்களை பாதிப்பு இல்லாமல் பிரித்தும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்த முடியும் என்றார்.

Tags : Nimmeli ,Sirkazhi , Farmer
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்