×

கனிமார்க்கெட் சந்தையில் ரூ.51.59 கோடியில் ஜவுளி வளாகம்

ஈரோடு: ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளிசந்தையில் 51.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டும் பணி அடுத்த வாரம் துவங்குகிறது. இதற்காக பழைய கடைகளை இடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் கனிமார்க்கெட் ஜவுளிசந்தை இயங்கி வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான இந்த கனிமார்க்கெட் ஜவுளிசந்தையில் தினசரி கடைகள், வாரக்கடைகள் என 1,500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஜவுளி வியாபாரிகள் இங்கு வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்கின்றனர். வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை இரவு வரை நடக்கும் வாரச்சந்தையில் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும்.

இந்நிலையில், இந்த கனிமார்க்கெட் ஜவுளிசந்தையில் கட்டப்பட்ட பழைய கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் உள்ளதால் அதை இடித்து விட்டு புதிதாக ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.51.59 கோடி மதிப்பீட்டில் 50 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் இந்த ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதற்காக, இங்குள்ள தினசரி கடைக்காரர்களுக்கு மாநகராட்சி சார்பில் இதே பகுதியில் இரும்பு தகடால் ஆன தற்காலிக கடைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 120 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு பழைய இடத்தில் வைத்திருந்த ஜவுளி கடைகள் அகற்றப்பட்டது. பெரும்பாலான ஜவுளி கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டுமான பணிகளுக்காக பழைய கட்டிடங்களை இடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று ஜவுளி மார்க்கெட்டின் மைய பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தை போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் உதவியுடன் இடித்து அகற்றினர். இடிபாடுகள் அகற்றப்பட்ட பிறகு அடுத்த வாரத்தில் கட்டுமான பணிகள் துவங்குகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டுவதற்காக தீபாவளி பண்டிகைக்கு முன்பே பூமிபூஜை போடப்பட்டது. ஆனால், வியாபாரிகள் தீபாவளி வரை கடைகளை அகற்ற வேண்டாம் என கோரிக்கை விடுத்ததால் நிறுத்தி வைத்திருந்தோம். மேலும், இவர்களுக்கு இதே பகுதியில் தற்காலிக கடைகளையும் அமைத்து கொடுத்துள்ளோம். இதனால், கடைக்காரர்கள் பலரும் தற்காலிக கடைக்கு இடமாற்றம் செய்து கொண்டனர். பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் ஒருவாரத்தில் இப் பணி முடியும். அதன்பின், புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் துவங்கும். 50 ஆயிரம் சதுரஅடியில் கட்டப்பட உள்ள இந்த ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகத்தில் பார்க்கிங், குடோன் வசதி, தேவையான அடிப்படை வசதிகள் என அனைத்து வசதிகளுடன் இந்த வளாகம் அமைய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kanimarkket
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...