சபரிமலை விவகாரம், ரஃபேல் வழக்கு, ராகுல் மீதான வழக்கு உள்பட 3 முக்கிய வழக்குகளில் நாளை தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: நாளை 3 முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தான் ஓய்வு பெற உள்ள 17-ம் தேதிக்குள் 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியதோடு, சனிக்கிழமை அன்று தீர்ப்பு அளித்திருப்பதும் வரலாற்றில் முதல் முறை சம்பவமாகும். 69 ஆண்டு கால உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தீர்ப்பும் சனிக்கிழமையில் வழங்கப்பட்டதில்லை. வழக்கமாக, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நீதிமன்றத்தின் பணி நாட்களாக உள்ளன. முக்கிய வழக்கு விசாரணைகள் சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களிலும் நள்ளிரவு முதல் விடிய விடிய கூட நடந்திருக்கிறது.

ஆனால், முதல் முறையாக தீர்ப்பு நாளை சனிக்கிழமையாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தேர்ந்தெடுத்திருப்பது கூட வரலாற்று சிறப்புமிக்கதாகி உள்ளது. இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் வருகிறது என டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்ற செயலாளர் ஜெனரல், தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதும் கோகாய் அமர்வு தீர்ப்பு அளிக்கிறது. இதனை தொடர்ந்து நாளை முக்கிய 3 வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது என அறிவிக்கப்பட்டது.

3 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு

* சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்படுகிறது. நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது

* ரபேல் ஜெட் கொள்முதலில் மோடி அரசு எந்த தவறும் செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு 14ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீதும் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி கொண்ட 3 பேர் அமர்வு, நாளை தீர்ப்பு வழங்குகிறது

* ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடன் என கூறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது கிரிமினல் கண்டன நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதும் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Related Stories: