×

ராஜபாளையம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் தற்காலிக பாலம் தகர்ந்தது

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் தற்காலிக பாலம் அடித்து செல்லப்பட்டது. விவசாய பணிக்கு சென்று சிக்கியவர்களை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடியாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு பகுதிக்கு செல்லும் வழியில் அனத்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே போக்குவரத்துக்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. மழைக்காலங்களில் வெள்ளம் வரும்போது, தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் கரை புரண்டு ஓடும். இதனால் ராஜபாளையம் - செண்பகத்தோப்பு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும். இதனை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1.50 கோடியில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு துவங்கி நடந்து வருகிறது. இந்த பணிக்காக தரைப்பாலம் உடைத்து அகற்றப்பட்டது.

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆற்றின் குறுக்கே ராட்சத சிமென்ட் குழாய்களை பதித்து, அதன்மேல் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக பாலம் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் அனத்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று அதிகாலை 3 மணியளவில் அனத்தலை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. 6 சிமென்ட் குழாய்களும் வெள்ளத்தில் சென்றது.

இதனால் ராஜபாளையத்திற்கும், செண்பகத்தோப்புக்கும் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை தரைப்பாலத்தை கடந்து, மறு பகுதியில் விவசாய நிலங்களுக்கு சென்றவர்கள் வீட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்தனர். தகவலறிந்து வந்த ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் எதிர்கரையில் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் ஆனந்தராஜ், மண்டல துணை தாசில்தார் காளிராஜன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மேம்பால கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,Rajapalayam , Rajapalayam
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...