அதிமுக கொடிக்கம்பம் விழுந்து இளம்பெண் படுகாயம் அடைந்தது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையீடு : உரிய ஆவணங்களுடன் மனுவாக தாக்கல் செய்ய அறிவுரை

சென்னை : கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து இளம்பெண் படுகாயம் அடைந்தது தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்க கோரி டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். ஆய்வு செய்து உரிய ஆவணங்களுடன் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல் தெரிவித்தனர்.

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்து

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். முதல்வர் வருகையையொட்டி அவிநாசி ரோட்டில் பீளமேட்டில் இருந்து பல இடங்களில் சாலையோரமும், சென்டர் மீடியனிலும் அ.தி.மு.க. சார்பில் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் காலை கோல்டுவின்ஸ் பகுதியில் நடப்பட்டிருந்த 15 அடி உயர கொடிக்கம்பம் திடீரென சாய்ந்து ரோட்டில் விழுந்தது. அப்போது அவ்வழியாக கோவையில் இருந்து தென்னம்பாளையத்துக்கு உரம் ஏற்றி சென்ற லாரி சென்று கொண்டிருந்தது. கொடிக்கம்பம் விழுவதை பார்த்ததும் லாரியை ஓட்டிச்சென்ற ராஜபாளையம் பகுதியை சேர்ந்த டிரைவர் முருகன் (53) லாரியை சற்று திருப்பினார்.

லாரி டிரைவர்  கைது

அப்போது லாரி, அந்த பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வரும்  ராஜேஸ்வரி (31) சென்ற மொபட் மீது மோதியது. இதில் ராஜேஸ்வரி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் மொபட் மீதும், ராஜேஸ்வரியின் கால்கள் மீதும் லாரி பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ராஜேஸ்வரியின் இரு கால்களும் நசுங்கியது. இதேபோல அந்த லாரி அவ்வழியாக பைக்கில் நீலம்பூர் சென்று கொண்டிருந்த விஜய் ஆனந்த் (32) என்பவர் மீதும் மோதியது. இதில் காயமடைந்த விஜய் ஆனந்த் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், ராஜேஸ்வரி நீலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி டிரைவர் முருகனை (53) கைது செய்தனர். அவர் மீது அதிவேகமாக, ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேமரா ஆதாரமும் அழிக்கப்பட்டதாக தகவல்

கொடிக்கம்பம் நட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் லாரி டிரைவர் மீது மட்டும் கைது நடவடிக்கை எடுத்திருப்பது மக்கள் கொதிப்படைய செய்துள்ளது. கொடிக்கம்பத்தால் எந்த விபத்தும் ஏற்படவில்லை என நம்ப வைக்கும் வகையில் கேமரா ஆதாரமும் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விதிமுறை மீறி ரோட்டில் கொடிக்கம்பங்கள் வைத்த நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முறையீடு

இந்நிலையில் கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் விபத்தில் சிக்கியது குறித்து உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முறையிட்டுள்ளார். கோவை கொடிக்கம்ப வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரியதையடுத்து, உரிய ஆவணங்களுடன் மனுத்தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து மனு தாக்கல் செய்யப்பட்டு, இவ்வழக்கு அவசர வழக்காக விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: