×

மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தின் கீழ் முதன்முறையாக வழக்குப்பதிவு

சென்னை: சென்னையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த அருண்குமார் உள்ளிட்டோரை பணிக்கு அமர்த்திய ஒப்பந்ததாரர் தண்டபாணியை போலீசார் கைது செய்தனர். ஒப்பந்ததாரர் மற்றும் வணிக வளாக நிர்வாகம் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும்  சட்டத்தின் கீழ் முதன்முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல், எஸ்.சி, எஸ்.டி சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இளைஞர் பலி


சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ தனியார் வணிக வளாகத்தில் நேற்று ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், ரஞ்சித்குமார் ,யுவராஜ் உட்பட 5 தொழிலாளிகள் கழிவுநீர் தொட்டியை, இறங்கி சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த ரஞ்சித் குமார் என்பவரை விஷவாயு தாக்கியுள்ளது.அதை பார்த்த அவருடைய சகோதரர் அருண்குமார் உடனடியாக கழிவுநீர் தொட்டியில் தான் இறங்கி ரஞ்சித் குமாரை காப்பாற்றி உள்ளார். பின்னர் கழிவு நீர் தொட்டியில் இருந்து மேலே ஏற அவர் முயன்ற போது, விஷவாயுவில் சிக்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா சாலை போலீசார் உயிரிழந்த அருண்குமார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து அண்ணாசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுமை தூக்கும் கூலி வேலை செய்த வந்த அருண்குமார் உட்பட ஐந்து பேரை ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் தான் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திற்கு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்கு அழைத்து சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தி இது போன்ற உயிருக்கு ஆபத்தான பணியில் ஈடுபடத்த கூடாது என்ன விதிகளை மீறிய, தனியார் வணிக வாளக நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயிரிழந்த அருண்குமார் உறவினர்கள் வலியுறுத்துகின்றனர்.

முதன்முறையாக வழக்குப்பதிவு


இந்நிலையில் சென்னையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் தண்டபாணி கைது செய்யப்பட்டுள்ளார். ஒப்பந்ததாரர் மற்றும் வணிக வளாக நிர்வாகம் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதர்களை கொண்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கூடாது என்பதை முன்னிறுத்தி, 2013ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்பிரிவு 9 மற்றும் எஸ்.சி, எஸ்.டி ஆக்ட் எனப்படும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவாகியுள்ளது. ஒப்பந்ததாரர் தண்டபானியை கைது செய்திருக்கும் போலீசார், சம்பந்தபட்டவர்களை கைது செய்து குறித்து ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டம்

மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதித்து 2013ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டத்தின் கீழ் மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த சட்டம் சரியான முறையில் அமல்படுத்தவில்லை. இதனிடையே இது தொடர்பான வழக்கில  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு , மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மனித உரிமை மீறல் ஆகும். இதற்கு தடை விதித்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Tags : time ,men , For the first time, the prosecution, the sewer tank, the gas tanker, the contractor, were arrested
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான...