மேட்டூர் அணையின் நீர்வரத்து 21,946 கன அடியிலிருந்து 16,678 கன அடியாக குறைவு..: பாசனத்துக்கான நீர் திறப்பும் குறைப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்வரத்து 21,946 கன அடியிலிருந்து 16,678 கன அடியாக குறைந்துள்ளதால், பாசனத்துக்கான நீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக நேற்றைய தினம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 21,946 கன அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்வரத்து 16,678 கன அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து குறைந்துள்ளதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்காக 15,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்சியாக உள்ளது.

முன்னதாக, காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பருவமழை தீவிரமடைந்து, நீர்வரத்து அதிகரித்ததால், கடந்த செப்., 7ல் நடப்பாண்டில் முதல்முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. மீண்டும் அதே மாதம் 23ல் இரண்டாம் முறை, கடந்த மாதம் 23ல் மூன்றாம் முறை அணை நிரம்பியது. நீர்வரத்து சரிந்ததால், கடந்த 8ல் நீர்மட்டம் 119 அடியாக சரிந்தது. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரமடைந்து மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை நேற்று முன்தினம் இரவு, நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியது. அதிலும் மூன்று மாதத்தில் அணை நான்கு முறை நிரம்பியது டெல்டா விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நேற்று அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. வினாடிக்கு 19,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. மாலை, அணையிலிருந்து பாசனத்துக்கு 10,000 கனஅடி உபரியாக 5,000 கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: