வெளிநாடு செல்ல தடை விதிக்கும் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயர் நீக்கம்: சிகிச்சைக்காக லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி

இஸ்லாமாபாத்: மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கும் வகையில், வெளிநாடு செல்ல தடை விதிக்கும் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயர் நீக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு கோட் லக்பாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சவுத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை அமைப்பு அவரை காவலில் எடுத்து விசாரித்தபோது, ஷெரிப்பின் ரத்த தட்டணுக்கள் குறைந்து சிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் அவரது உடல்நலம் சற்று தேறியதும், லாகூரின் ஜதி உம்ராவில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினார்.

அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள அனைத்து மருத்துவ வசதிகளையும் பயன்படுத்தி நவாஸ் ஷெரீப்புக்கு சிகிச்சை அளித்துப் பார்த்துவிட்டதாகவும், அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பதுதான் ஒரே வழி என்றும் மருத்துவர்கள் கூறினர். இந்நிலையில் நவாஸ் ஷெரீப் வெளிநாடு செல்ல தடை இருப்பதால் அதற்கு அனுமதி கோரி அவரது குடும்பத்தினர் அரசிடம் விண்ணப்பித்தனர். அதனை பரிசீலித்த பாகிஸ்தான் அரசு அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது.

இது தொடர்பாக இம்ரான்கானின் சிறப்பு உதவியாளர் நயீம் உல் ஹக் கூறுவதாவது; பாகிஸ்தானியர் அனைவருக்கும் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் உரிமை உள்ளது. அந்த அடிப்படையில் நவாஸ் ஷெரீப்பின் மருத்துவ அறிக்கைகளை பார்வையிட்டு அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறினார். அதன்படி கடந்த 10-ம் தேதி காலை 9 மணிக்கு நவாஸ் ஷெரீப் தனது சகோதரர் ஷாபாஸ் ஷெரீப்புடன் லண்டனுக்கு புறப்பட்டு செல்வார் என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்தது. ஆனால் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப்பின் பெயரை நீக்காததால் அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்வதில் சிக்கல் எழுந்து வந்தது.

இதனால் சிகிச்சைக்காக லண்டன் செல்ல முடியாத நிலை நீடித்து வந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்ல அந்நாட்டு அமைச்சரவை நிபந்தனையுடன் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே அமைச்ச்ர் ஷேக் ரஷீத் அகமது கூறுகையில், சில நிபந்தனைகளின் பேரில் நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சிகிச்சை முடிந்து திரும்பி வருவதற்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என கூறினார்.

Related Stories: