மக்களுக்கு இவர்கள் என்ன செய்தார்கள்? சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைதான் ரஜினி, கமலுக்கு ஏற்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

சேலம்: அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறும் ரஜினியும், கமலும் மக்களுக்கு என்ன பணி செய்தார்கள்? இவர்களை விட மிகப்பெரிய நடிகர் சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைதான் இவர்களுக்கும் ஏற்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். சேலத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: மேயரை மக்கள் தேர்ந்தெடுக்காமல், பிரதிநிதிகளே தேர்வு செய்யும் நடைமுறை கொண்டுவரப்படவுள்ளதாக கூறுவது தவறு. தற்போது வரை அப்படிப்பட்ட நிலைமை எதுவும் இல்லை. அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத், மோடி நாட்டிலிருந்து வந்து இருக்கிறோம் என அமெரிக்காவில் கூறியதில் தவறில்லை. அண்மையில் மோடி அமெரிக்காவுக்கு சென்று வந்தார். அவருடைய பெயரை கூறினால் எல்லோருக்கும் நன்றாக தெரியும் என்பதற்காக அவ்வாறு கூறியிருக்கலாம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு ‌வழங்கும் திட்டம் தற்போது எதுவும் இல்லை. அரசின் நிதிநிலை திருப்தி அடைந்தவுடன் அதுகுறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாக ரஜினி கூறியதற்கு பதில் அளித்தீர்கள் அவரைப்போலவே, கமலும் கூறியுள்ளாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி கூறியதாவது, அரசியலில் வெற்றிடம் இருப்பதாக சொல்லும் கமல்ஹாசன் இடைத்தேர்தல்களில் ஏன் போட்டியிடவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் எவ்வளவு ஓட்டுகளை பெற்றார்? அவருக்கு வயதாகிவிட்டது. திரைப்படங்களில் தகுந்த வாய்ப்பு இல்லாததால் நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கின்றனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், மற்றவர்களை குறை சொல்லி பேசுவது தவறு.

அவர்கள் மக்களுக்கு என்ன பணி செய்தார்கள்? படங்களில் நடித்தார்கள், வருமானத்தை ஈட்டிக்கொண்டார்கள். இன்றுவரை திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களிடத்தில் மிகப்பெரிய செல்வாக்கு இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள். இவர்களைவிட மிகப்பெரிய நடிகர், சிவாஜி கணேசன் தேர்தலை சந்தித்து எப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதென்று உங்களுக்கே தெரியும். அவர் கட்சி தொடங்கி ஏற்பட்ட நிலைமைதான் இவர்களுக்கும் ஏற்படும். இவர்களுக்கு அரசியலில் என்ன தெரியும்? எத்தனை உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளது என்று தெரியுமா? அந்தப் பகுதி மக்களின் பிரச்னை தெரியுமா? அடிப்படை தெரியாமலே தலைவர் போன்று உருவாக்கிக் கொண்டார்கள். ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும், பின்னர் அதற்குண்டான பதில் தரப்படும். இவ்வாறு அவர் கூறினார் ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் அதேபோல்தான் வருவாரா என்று கேட்டதற்கு, யூகங்களுக்கு பதில் கூற முடியாது என்றார்.

கொடிகள் நட வேண்டாம் என்று உத்தரவு இல்லை

சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பேட்டி அளித்தபோது கோவையில் கொடிக்கம்பம் விழுந்து பெண் ஒருவர் படுகாயமடைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர், இதுகுறித்து இதுவரை எனது கவனத்துக்கு எந்த தகவலும் வரவில்லை. வந்தால் உரிய முறையில் விசாரிக்கப்படும் என்றார். அப்போது கொடிக்கம்பம் அமைத்தது தான் விபத்துக்கு காரணம் என்கிறார்களே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர், கொடிக்கம்பம் அமைக்கக்கூடாது என்று, எந்த தடையும் இல்லையே என்றார். மேலும், ‘‘சின்னசேலம் பகுதியில் ஹெல்மெட் சோதனையின்போது மூதாட்டி உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையும்,பொதுமக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்’’என்றார்.

Related Stories: