குறித்த நேரத்தில் படத்தை முடித்து கொடுக்காமல் ரூ6.10 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக நடிகர் அதர்வா மீது பரபரப்பு புகார்: கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் அளித்தார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வளசரவாக்கத்தை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் மதியழகன் (43), ேநற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நடிகர் அதர்வா நடத்தி வரும் சினிமா தயாரிப்பு நிறுவனம் ‘செம்ம போத ஆகாதே’ என்ற திரைப்படம் எடுத்தது. அதில் கதாநாயகனாக அதர்வா நடித்தார். இந்த படத்திற்கு எனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக படத்தின் வெளி விநியோக ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக நான் ரூ5.50 கோடி பணத்தை அதர்வா நடத்தி வரும் சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்கு அளித்தேன். திட்டமிட்டப்படி கடந்த 29.3.2018 அன்று படம் வெளியிடுவதாக நடிகர் அதர்வா உறுதியளித்தார். ஆனால், சொன்ன தேதியில் படத்தினை முடித்து தராத காரணத்தினால் படத்தை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் என்னிடம் படத்தை வாங்கிக்கொண்ட அனைவரும் வினியோகிஸ்தர் என்ற முறையில் ஏற்பட்ட நஷ்டத்தை நான் சரிசெய்தேன். இந்த இழப்பு குறித்து கேட்டபோது, நடிகர் சார்பில் எந்த பதிலும் வரவில்லை. இதனால் நான் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தேன். அப்போது நடிகர் விஷால் இருவரிடமும் பேசி இழப்பிற்காக நடிகர் அதர்வா மற்றொரு படம் நடித்து கொடுப்பார் என்று கூறினார். அதன்படி நான், ‘மின்னல் வீரன்’ என்ற படத்தை நடிகர் அதர்வாவை வைத்து எடுக்க முடிவு செய்தேன். இதற்காக அவர் ரூ1 கோடி பணம் கேட்டார். அதன்படி நான் முதல் தவனையாக ரூ45 லட்சம்  கொடுத்தேன். மீதமுள்ள பணத்தை படக்குழுவினர்களுக்கு கொடுத்துவிட்டேன். படம் பற்றி அதர்வாவிடம் பேச சென்ற போது அவர் அலைக்கழித்து வந்தார்.

இதனால், ஏற்கனவே நடிகர் அதர்வாவால் நான் ரூ5.50 கோடி மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் கூறியதால் மேலும், ரூ1,19,25,000 பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளேன். இதற்கிடையே ரூ15 லட்சம் பணத்தை அதர்வா கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். எனவே, நடிகர் அதர்வா மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து ரூ6.10 கோடி பணத்தை பெற்று தரவேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: