×

வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் குடோனாக மாறிய சமூக நலக்கூடம்: மக்கள் நிகழ்ச்சி நடத்த முடியாத அவலம்

பெரம்பூர்: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில், கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதி ₹40 லட்சத்தில், சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. வியாசர்பாடி மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இந்த சமுதாய நலக்கூடத்தில் தங்களது சுபநிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். காலப்போக்கில் இந்த சமுதாய நலக்கூடத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றால் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு சென்று பதிவு செய்ய வேண்டும், என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதன்படி, அங்கு சென்றால் அதிகாரிகள் பலமுறை அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வேறு வழியின்றி தனியார் மண்டபங்களை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், பயன்பாடின்றி கிடக்கும் சமூக நலக்கூடத்தை தேர்தல் நேரத்தில் போலீசார் தங்குவதற்கும், தேர்தல் முடிந்தவுடன் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.ஏழை எளிய மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட இந்த சமூக நலக்கூடம், அதிகாரிகளின் செயல்பாட்டால் தற்போது, குடோனாக மாற்றப்பட்டுள்ளது.  

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இந்த சமூக நலக்கூடத்தை பதிவு செய்ய சென்னை மாநகராட்சிக்கு சென்றால், அங்கு 4 அல்லது 5 முறை தங்களை வரவழைத்து அலைகழிக்கின்றனர். இந்த சமூக நலக்கூடத்தை சீரமைத்து இங்கேயே ஒரு அலுவலரை நியமித்தால், நாங்கள் இங்கு வந்து புக் செய்து தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்த ஏதுவாக இருக்கும். தற்போது உள்ள விலைவாசி உயர்வால் தனியார் மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றால் குறைந்தது ₹25 ஆயிரம் செலவாகிறது. இந்த சமூகக் கூடத்தில் நிகழ்ச்சி நடத்தினால் 6 ஆயிரம் முதல் 7500 வரை மட்டும் செலுத்தினால் போதும். ஆனால் இதை புக் செய்வதற்கு பல்வேறு சிக்கல்களும் உள்ளன. எனவே அடித்தட்டு மக்கள் வாழும் பகுதியில் உள்ள சமூக நல கூடங்களை உடனடியாக சரி செய்து மாநகராட்சி அதிகாரிகள் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு சமூகநல கூடத்தில் ஒரு உதவியாளரை நியமித்து அந்த சமூக நல கூடத்திலேயே நிகழ்ச்சிகளை புக் செய்தால் அதிக அளவில் நிகழ்ச்சிகள் பதிவாகி மாநகராட்சிக்கும் வருமானம் வரும். இதனால் ஏழை எளிய மக்களும் பயன்பெறுவர்,” என்றனர்.


Tags : Vyasarpadi Sathiyamoorthy City ,Vyasarbadi Satyamurthy City ,Gudon , Vyasarbadi Satyamurthy, City, Gudon, perform
× RELATED 24,000 வேட்டி சேலைகள் பதுக்கல் அதிமுக...