×

துபாய் சர்வதேச பாக்சிங் தங்கம் வென்றார் தமிழக வீரர் செந்தில்நாதன்: உரிய அங்கீகாரம் இல்லை என ஆதங்கம்

சென்னை: ஐக்கிய அரபு நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் துபாய் அரசு சார்பில் 6வது சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் துபாயில் கடந்த 8, 9 தேதிகளில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக குத்துச்சண்டை வீரர் ஜி.செந்தில்நாதன் தங்கப் பதக்கம் வென்றார்.தாயகம் திரும்பிய அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த   எனது பெற்றோர், உறவினர் மற்றும் பயற்சியாளருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தாலும், பாக்சிங்கில் சாதிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. என்னைப் போன்ற வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
இங்கே குத்துச்சண்டை வீரர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சரியான ஆதரவு கிடைத்தால் இன்னும் பல போட்டிகளில் பங்கேற்று, இந்தியாவுக்காக பதக்கங்களை வென்று பெருமை சேர்ப்பேன். நான் பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால், உரிய வேலை கிடைக்கவில்லை. எனவே சென்னை மாநகராட்சியிலாவது எனக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு செந்தில்நாதன் தெரிவித்தார்.குத்துச்சண்டை போட்டிகளில் சாதனை படைத்துவரும் இவருக்கு நந்தினி  என்கிற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.  நாள் ஒன்றுக்கு காலை இரண்டு மணிநேரம் மாலை இரண்டு மணி நேரம் என ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் வரை பயிற்சி மேற்கொள்கிறார். மற்ற நேரத்தில் பெயின்ட் அடிப்பது, கூலி வேலை செய்வது என்று சொற்ப வருமானத்தை ஈட்டி வருகிறார். மற்ற குத்துச்சண்டை வீரர்கள் போல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட முடியாமல், வீட்டில் என்ன இருக்கிறதோ அதை சாப்பிட்டு தீவிரப் பயிற்சி மூலம் வெற்றிகளை குவித்து வருகிறார். கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அரசு,  சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பெருமை தேடித்தரும் இதுபோன்ற வீரர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Tags : Dubai International Boxing Gold Winner ,Senthilnathan ,Sentinel Nathan Dubai International Boxing , Dubai ,Boxing, Gold medal , Senthilnathan
× RELATED கரூரில் பா.ஜ.க. தலைவர் நட்டா...