×

நாம் ஒன்றுபட்டு நிற்கும்போது நம்மை எந்த கொம்பனாலும் வெல்ல முடியாது : திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: “கலைஞரின் உடன்பிறப்புகளாக நாம் ஒன்றுபட்டு நிற்கும்போது நம்மை  வென்றிட எந்தக் கொம்பனாலும் முடியாது. எனவே, ஒன்றிணைவோம், வென்றிடுவோம்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை ராயப்பேட்டை  ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் மாநாடு போல பந்தலும் மேடையும் அமைத்து நவம்பர் 10ம் தேதியன்று திமுக பொதுக்குழு சிறப்பாக நடத்தப்பட்டது. திமுக பொதுக்குழுவில் வெளிப்படையான கருத்துகள், விமர்சனங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை அதில் பேசியவர்கள் முன்வைத்தனர். அத்தனையும் திமுகவின் நலன் கருதியே சொல்லப்பட்டவை என்பதைப் புரிந்துகொண்டேன். இந்த உட்கட்சி ஜனநாயகம்தான் 70 ஆண்டுகால திமுகவின் தனிப்பெரும் சிறப்பு. பொதுக்குழு என்றாலே அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, நாம்  மட்டுமல்ல; நாடே எதிர்பார்ப்பது வழக்கம். திமுகவின் ஒவ்வொரு தீர்மானமும் தமிழ்ச் சமுதாயத்தின் நலன் காக்கும் பிரகடனங்களாக இருக்கும். நவம்பர் 10ல் நடைபெற்ற பொதுக்குழுவில் திமுக சட்டவிதிகளில் திருத்தங்கள், தனிச் சிறப்புத் தீர்மானம், அதனைத் தொடர்ந்து 20 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக சட்ட திருத்தக்குழுச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் வில்சன் முன்மொழிந்த சட்டத்  திருத்தத்தின்படி, திமுகவின் குறிக்கோள் தொடர்பான சட்டவிதியில், ‘பேரறிஞர்  அண்ணா வகுத்து முத்தமிழறிஞர்  கலைஞர் கடைப்பிடித்து வந்த குறிக்கோளுக்கு ஏற்ப’ என்ற சொற்றொடரையும், ‘பேரறிஞர் அண்ணா அறிவுறுத்தி முத்தமிழறிஞர் கலைஞர் போற்றிப் பாதுகாத்து பின்பற்றிய கொள்கைகளான கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு அடிப்படையில்’ என்ற சொற்றொடரையும் முதன்மையாக வைத்து, திமுகவின் குறிக்கோளையும் கொள்கைகளையும் கொண்ட சட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டு, பேரறிஞர் அண்ணாவுக்கும் முத்தமிழறிஞர் கலைஞருக்கும் சிறப்பு சேர்க்கப்பட்டது.

அதுபோலவே விதி 18(4) புதிய விதி சேர்க்கையின்படி, “தலைவருக்கு, தலைமைக் கழகத்தின் நிர்வாகிகள் உட்பட அனைத்து நிர்வாகிகளின் பொறுப்புகளையும், கடமைகளையும், அதிகாரங்களையும் தேவைக்கேற்ப செயல்படுத்த முழு அதிகாரம் உள்ளது. மேலும், மற்ற பொறுப்பில் உள்ள நிர்வாகிகளின் உத்தரவுகளை மறு ஆய்வு செய்தல், சீராய்வு செய்தல், மாற்றியமைத்தல், நீக்குதல் உள்பட அனைத்து அதிகாரமும் தலைவருக்கு உள்ளது. திமுகவின் சட்டவிதிகளையும் கட்சியின் நலனுக்கேற்பவும், அதன் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையிலும் திருத்தி அமைக்க, தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அவ்வாறான திருத்தங்கள் உடனே அமலுக்கு வரும்” என்கிற அந்தத் திருத்தத்தின் கடைசி வரி மிக முக்கியமானது.

“அவ்வாறு கொண்டு வந்த சட்ட திருத்தங்கள் பொதுக்குழுவின் ஒப்புதலைப் பெறவேண்டும்” என்கிற இந்த வரி திமுகவின் வழிவழி வரும் ஜனநாயகத்தன்மைக்கு சான்றாகும்.  வலிமைப்படுத்தப்படும் கழகத்தின் கட்டமைப்பினைக் கொண்டு நாம் மேற்கொள்ளும் பயணத்தின் நோக்கம் என்ன என்பதை பொதுக்குழுவில் உங்களில் ஒருவனான என்னால் முன்மொழியப்பட்ட தனிச்சிறப்புத் தீர்மானமும், கழகத்தின் செயல்பாடுகள் எத்தகைய வழியில் அமைய வேண்டும் என்பதை மற்ற 20 தீர்மானங்களும் தெளிவுபடுத்தி இருக்கின்றன. திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தனிச் சிறப்பு தீர்மானத்தில், மாநிலங்களின் அதிகாரத்தைப் பெருக்கி, கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டிடவும் உரிய திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் திமுகவின் தனிச் சிறப்புத் தீர்மானமாகும். இது திமுக இலட்சியக் குரல். கட்சிக்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்கள் திருந்தவேண்டும். இல்லையெனில் திருத்தப்படுவார்கள் என்பதை பொதுக்குழுவில் எடுத்துரைத்து, எனக்காக அல்ல, திமுகவின் நலனுக்காக சர்வாதிகாரியாக மாறுவேன் என்று தெரிவித்தேன்.  

திமுக ஒரு ஜனநாயக இயக்கம். அதன் வழிமுறைகள் ஜனநாயகத்தன்மை வாய்ந்தவை. உங்களில் ஒருவனான நானும் அந்தத் தன்மையுடன் செயல்படக்கூடியவன்தான். திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் என திராவிட இயக்க வரலாற்றில் அறவழிப் போராட்டங்கள் நடைபெறும்போது, அதனைத் தலைமையேற்று கட்டுக்கோப்புடன் நடத்துவதற்கு ‘சர்வாதிகாரி’கள் நியமிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் பேரறிஞர் அண்ணா ‘சர்வாதிகாரி’யாக தந்தை பெரியார் நியமித்து, போராட்டத்தை வழிநடத்திடச் செய்தார். அதற்காக அண்ணா ஆயுதம் ஏந்தவில்லை. அடக்குமுறை செய்யவில்லை. அன்பும் அறிவும் கொண்டு போராட்டத்தை நடத்தினார். அண்ணா வழிதான் நம் வழி. அந்த வழியில் தொடர்ந்த கலைஞரின் பாதையில் பயணிப்போம். திசைதிருப்ப நினைப்போரைப் புறக்கணிப்போம்.

நவம்பர் 11 அன்று நடைபெற்ற, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நவம்பர் 16 அன்று பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தர்மபுரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்கிறேன். திமுக நிர்வாகிகள் மற்ற இடங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். இது நமது வெற்றிக்கான தொடக்கப்புள்ளி என்று பொதுக்குழுவில் குறிப்பிட்டேன். அந்தப் புள்ளி, கோடாக நீள வேண்டும். கேடு மிகுந்த ஆட்சியாளர்களை விரட்டிடும் படையாக வேண்டும். வெற்றி வரலாற்றுக்குக் கட்டியம் கூறிடும் பொதுக்குழுவில் சொன்னவற்றை மனதில் கொண்டு, பொதுத்தேர்தலில் செய்து காட்டுவோம். தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளாக நாம் ஒன்றுபட்டு நிற்கும்போது நம்மை வென்றிட எந்தக் கொம்பனாலும் முடியாது. எனவே, ஒன்றிணைவோம். வென்றிடுவோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை மீட்க தெளிவான திட்டம் உள்ளதா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு: செப்டம்பர் 2019க்கான தொழில் துறை உற்பத்தி 4.3 சதவீதம் பின்னடைவைக் கண்டிருப்பதாக குறியீட்டுத் தரவுகள் தெரிவிக்கின்றன. பொருளாதார மந்தநிலையின் தீவிரத்தை இது வெளிக்காட்டுகிறது. தொழில்துறையின் செயல்பாடுகள் தேக்க நிலையை நோக்கி சரிந்து கொண்டிருக்கின்றன. பா.ஜ. அரசு உறுதியளித்த வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்புகள் எங்கே? வீழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு தெளிவான பாதையினை வகுத்துள்ளதா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,volunteers ,MK Stalin , DMK volunteers, MK Stalin, letter
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி