3,000 லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.க்கு 5 ஆண்டு சிறை

நாகர்கோவில்: ஈரோடு  மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் ரகுபதி(51). இவர்  கடந்த 2012ம் ஆண்டு தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.யாக  பணியாற்றி வந்தார். அப்போது தென்தாமரைகுளத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர்  மாசானமுத்து என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஜான்தேவசிங் என்ற மகேஷ் மீது  ஒரு புகார் செய்தார்.  இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க  எஸ்ஐ ரகுபதி, மகேஷிடம் 5 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.   சம்பவத்தன்று மகேஷ், நண்பர் சந்திரனுடன் தென்தாமரைகுளம் போலீஸ்  நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த எஸ்ஐ ரகுபதியிடம் மகேஷ் 3 ஆயிரம் கொடுத்தார். பணத்தை கொடுக்கும்போது சந்திரன், ரகுபதிக்கு  தெரியாமல் வீடியோ எடுத்தார்.

இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து ஐகோர்ட் உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இவ்வழக்கு விசாரணை  நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து  வந்தது.  வழக்கில் நீதிபதி அருணாசலம் நேற்று, எஸ்.ஐ  ரகுபதிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Stories: