சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் இன்ஜினே இல்லாத பைக்கை தள்ளி வந்தவருக்கு அபராதம்

சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு காவல்நிலையத்தில் பணிபுரிபவர் எஸ்.ஐ. சக்திவேல். நேற்று முன்தினம் அவர் ராஜிவ்காந்தி பேருந்து நிறுத்தப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை (48) என்பவர் தனது  பைக்கை தள்ளியபடியே வந்துள்ளார். அவர் பைக்கின் இன்ஜினை மெக்கானிக் ஷெட்டில் பழுது நீக்குவதற்காக கொடுத்துவிட்டு பைக்கை வெள்ளாற்றுக்கு கொண்டு சென்று கழுவதற்காக பைக்கை தள்ளி வந்ததாக தெரிகிறது. அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. சக்திவேல், தங்கதுரையிடம் பைக்கை ஓரம் கட்டி நிறுத்துமாறு கூறி, ஆர்.சி. புக், லைசென்ஸ், இன்சூரன்ஸ் என சான்றுகளை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். பின்னர் அவரிடம் ஏன் தலைகவசம் அணியவில்லை எனக் கேட்டு அபராதம் விதித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தங்கதுரை, அவரிடம் இன்ஜின் இல்லாத வண்டிக்கு ஏன் அபராதம் விதிக்கிறீர்கள் எனவும், வழக்கு பதிந்ததற்கு கம்யூட்டர் பில் வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

மேலும்  எஸ்.ஐ. சக்திவேலுவுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த மற்றொரு தலைமை காவலரான தரணி என்பவர் சேத்தியாத்தோப்பு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வேறொரு போக்குவரத்து காவலரை தொடர்பு கொண்டு, இந்த எண் கொண்ட வாகனம் தங்கள் பகுதியை கடந்து, உனது பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது, அவனை பிடித்து என்ன வழக்கு வேண்டுமானாலும் போடு,  அவனுக்கு 3 ஆயிரம் வரை அபராதம் போடு எனவும் கூறியுள்ளார். இவைகள் அனைத்தும் செல்போனில் பதியப்பட்டு, அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. போலீசாரின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதை அறிந்த சேத்தியாத்தோப்பு உட்கோட்ட டிஎஸ்பி ஜவஹர்லால் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேலுக்கு, இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மெமோ கொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளார். எஸ்ஐ சக்திவேல் இன்னும் 2 மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: