பவார் கட்சிக்கு அளித்த அவகாசம் முடியும் முன்பே மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: மத்திய அரசு தடாலடி முடிவு

* சிவசேனா, காங்கிரஸ் கொந்தளிப்பு

* சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அளித்த அவகாசம் முடியும் முன்பே, அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதை எதிர்த்து சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர இருப்பதாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 21ம் தேதி நடந்தது. இதில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றின. பாஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி

அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் இருந்தும், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பங்கிட்டு கொள்ளும் விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டது. இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை தங்களுக்கு தர வேண்டுமென்பதில் சிவசேனா பிடிவாதமாக இருந்ததால், ஆட்சி அமைக்க விருப்பமில்லை என பாஜ அறிவித்தது.

அதைத்தொடர்ந்து 2வது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். 24 மணி நேர கெடுவும் விதித்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள  சிவசேனா, பாஜ உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சியை பிடிக்க முயற்சி செய்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் டெல்லிக்கும் மும்பைக்கும் மாறி மாறி பறந்து ஆலோசனை நடத்தினர்.

ஆனால், ஆளுநர் விதித்த கெடுவுக்குள் அவ்விரு கட்சிகளும் எந்த உறுதியான முடிவையும் தெரிவிக்காததால், சிவசேனாவால் போதிய எம்எல்ஏக்கள் பலத்தை காட்ட முடியவில்லை. அதற்காக, கூடுதல் அவகாசம் கேட்டது. அதற்கு மறுத்து விட்ட ஆளுநர் கோஷ்யாரி, 3வது பெரிய கட்சி என்ற அடிப்படையில், தேசியவாத காங்கிரசுக்கு நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார். அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்எல்ஏ.க்களின் ஆதரவை காட்ட நேற்றிரவு 8.30 மணி வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இதனால், மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட குழப்பம் நீடித்தது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் உயர்மட்ட கூட்டம் டெல்லியில் நேற்று காலை கூடியது. சோனியா காந்தி தொலைபேசி மூலம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை தொடர்பு கொண்டும் ஆலோசித்தார். மேற்கொண்டு பவாருடன் ஆலோசனை நடத்த காங்கிரஸ் தரப்பில் மூத்த தலைவர்களான அகமது படேல், மல்லிகார்ஜூனா கார்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பவாருடன் நேற்று பேச்சு நடத்தினர். சிவசேனாவும், அடுத்த கட்ட காய் நகர்த்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது. மும்பையில் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காக சிகிச்சை பெற்று வரும் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை சந்தித்து பேசினார். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்திவரும் ராவத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், ‘மாநிலத்தில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. எனவே, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356ன்படி, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்யப்படுகிறது,’ என ஆளுநர் கோஷ்யாரி அறிவிக்க, உச்சகட்ட பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மதியம் அவசர அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், ஆளுநரின் பரிந்துரை படி மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையேற்று மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று மாலை அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

அடுத்த 6 மாதத்திற்கு அங்கு ஜனாதிபதி ஆட்சி தொடரும். அதன்பிறகு மீண்டும் தேர்தலை நடத்தலாம். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த 20 நாட்களாக மகாராஷ்டிராவில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கிடையே, ஆளுநர் தங்களுக்கு போதிய அவகாசம் அளிக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிவசேனா, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து இன்று புதிய மனு தாக்கல் செய்வதாக தெரிவித்துள்ளது. அதே சமயம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடரும் என அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதும் புதிய விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கண்டனம்

ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மும்பையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குழு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் பவார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தியது. பின்னர் பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல், ‘‘மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அரசியல் சாசனத்தை ஆளுநர் கோஷ்யாரி கேலிக்கூத்தாக்கி விட்டார். அவர், ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு ஏன் வாய்ப்பளிக்கவில்லை? அவசர கதியில் எங்களால் எந்த கூட்டணியும் அமைக்க முடியாது. குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்து முறையான பேச்சுவார்த்தைக்குப் பிறகே எந்த முடிவுக்கும் வர முடியும். இதில் நாங்கள் எந்த தாமதமும் செய்யவில்லை’’ என்றார். இதே போல, ஆளுநர் கோஷ்யாரி பாஜவுக்கு சாதகமாக செயல்படுவதாக சிவசேனாவும் குற்றம்சாட்டி உள்ளது.

வழக்கு தொடர்ந்தது சிவசேனா

மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பான சூழலுக்கு இடையே நேற்று காலை சிவசேனா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்களுக்கு போதிய ஆதரவை திரட்ட ஆளுநர் அனுமதி கொடுக்கவில்லை என்றும், கால அவகாசமும் கேட்கப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க சிவசேனா தரப்பு வக்கீல் வலியுறுத்தினார். ஆனால், அதற்கு உச்ச நீதிமன்ற பதிவுத்துறை மறுத்து விட்டது. இன்று புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இது குறித்து சிவசேனா தரப்பு வக்கீல் கூறுகையில், ‘‘நீதிமன்றத்தில் நாளை (இன்று) காலை 10.30 மணிக்கு புதிய மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் பின் முடிவெடுப்பதாக கூறி உள்ளது. புதிய மனுவில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்தும் வழக்கு தொடருவோம்,’’ என்றார்.

‘சிவசேனாவுக்கு ஆதரவு பற்றி

இன்னும் முடிவு செய்யவில்லை’

சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது கட்சியின் மூன்று மூத்த தலைவர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மும்பை அனுப்பி வைத்துள்ளார். அகமது பட்டேல், மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றனர். அவர்கள் சரத் பவாரை சந்தித்து பேசினார்கள். பின்னர், அந்த தலைவர்களுடன் சரத் பவார் கூட்டாக அளித்த பேட்டியில், ‘‘சிவசேனாவுக்கு ஆதரவு கொடுப்பது என்றால் அதற்கான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக முதலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே  ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். புதிய அரசு சுமூகமாக செயல்படுவதற்கு ஏதுவாக பொதுவான குறைந்தபட்ச திட்டம் குறித்து நாங்கள் விவாதித்தோம்,” என்றார். அகமது பட்டேல் கூறுகையில், “ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கேட்டு கடந்த  திங்கட்கிழமைதான் சிவசேனா எங்களை அணுகியது. அதற்கு ஆதரவு அளிப்பது பற்றி நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை,” என்றார்.

‘2 நாள்தான் கேட்டோம்; 6 மாதம் கிடைத்துள்ளது’      

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, நேற்று தனது கட்சி எம்எல்ஏ.க்களுடன் மும்பையில் ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘‘ஆட்சியமைக்க ஆதரவு கேட்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை கடந்த திங்கள் கிழமைதான் முதல் முறையாக தொடர்பு கொண்டோம். ஆட்சியமைக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டோம். ஆனால், ஆளுநர் 6 மாதம் அவகாசம் கொடுத்துள்ளார்,’’ என்றார்.

கெடு முடியும் முன்பே பரிந்துரைத்தது ஏன்?

நேற்று காலையிலேயே தேசியவாத காங்கிரஸ் தரப்பில் 3 நாள் அவகாசம் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆளுநர் மறுத்த பிறகே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரை செய்ததாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

முதல் முறை...

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. 59 ஆண்டு கால மகாராஷ்டிரா சட்டப்பேரவை வரலாற்றில் 3வது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2014ல் தேசியவாத காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

Related Stories: