×

பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்: பேரறிவாளன் ஒரு மாத பரோலில் விடுவிப்பு

சென்னை: சிறையில் உள்ள பேரறிவாளன் ஒரு மாத பரோலில் இன்று விடுவிக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், வேலூர் மத்திய சிறையில் இருந்து சிகிச்சைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுடன் இருக்கவும், சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள் சிறைத்துறையிடம் மனு அளித்தார். இதையடுத்து பேரறிவாளனுக்கு, தமிழக அரசு ஒரு மாதம் பரோல் வழங்கியது. தொடர்ந்து புழல் சிறையில் உள்ள பேரறிவாளன் இன்று காலை 6.30 மணிக்கு வேனில் ஏற்றி வேலூர் மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து வந்தனர். வேலூர் சிறையில் 9.37 மணிக்கு அவரை ஒப்படைத்தனர். 10 மணிக்கு வேலூர் ஆயுதப்படை போலீசார் மத்திய சிறைக்கு வந்தனர். அங்கிருந்து பேரறிவாளனை ஆயுதப்படை டிஎஸ்பி விநாயகம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டைக்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பரோலில் வரும் கைதிகள் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது. பேரறிவாளனுக்கு சிறப்பு அனுமதியை சிறை நிர்வாகம் அளித்துள்ளது. அதன்படி, பேரறிவாளன் அக்காள் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக 23 மற்றும் 24ம் தேதிகளில் கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும், பேரறிவாளனின் தந்தையின் மருத்துவ மேல்சிகிச்சைக்காக தேவைப்படும் உரிய நேரங்களில் தேவைப்படும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று வர அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர வேறு எங்கும் செல்ல அனுமதி கிடையாது. ஒரு மாத பரோல் முடிந்ததும் அடுத்த மாதம் 13ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார்’ என்றனர்.

Tags : home ,Perarivalan , Perarivalan
× RELATED வீடு புகுந்து கொள்ளை வாலிபருக்கு 9 ஆண்டு சிறை