வயிற்றில் குட்டியுடன் இருந்த பூனையை கொன்று கட்டி தொங்க விட்ட கொடூரம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் வயிற்றில் குட்டியுடன் இருந்த பூனையை கொன்று கயிற்றில் கட்டி தொங்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் வஞ்சியூர் அருகே பால்குளங்கரை பகுதியில் ஒரு மனமகிழ் மன்றம் செயல்படுகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மது அருந்துவதும், செஸ், கேரம் ேபான்ற விளையாட்டுகள் விளையாடுவதும் வழக்கம். நேற்று அங்கு ஒரு பூனை இறந்த நிலையில் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது.

Advertising
Advertising

இது குறித்து பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தை சேர்ந்த லதா இந்திரா, பார்வதிமோகன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பூனை வயிற்றில் குட்டியுடன் இறந்த நிலையில் தொங்க விடப்பட்டுள்ளது தெரிந்தது. அந்த பூனையை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டனர். தொடர்ந்து விசாரித்த போது அங்கு மது அருந்த வந்தவர்கள் பூனையை கொன்று கட்டி தொங்க விட்டது தெரிந்தது.

இதுகுறித்து பார்வதிமோகன் வஞ்சியூர் போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து பூனையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே பூனையை உயிரோடு கட்டி தொங்கவிட்டு கொலை செய்தார்களா? அல்லது பூனையை கொன்று கட்டி தொங்கவிட்டார்களா? என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: