அரசு பள்ளி சத்துணவில் அழுகிய முட்டை: மாணவர்கள் அதிர்ச்சி

காளையார்கோவில்: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் நேற்று சத்துணவுடன் வழங்குவதற்காக முட்டைகள் அவிக்கப்பட்டன. இதில் பெரும்பாலான முட்டைகள் அழுகிய நிலையில் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்துணவு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தெரிவித்தனர். அதற்கு அவர், ‘‘அனைத்து முட்டைகளையும் குப்பைத்தொட்டியில் கொட்டிவிடுங்கள். மாணவர்களுக்கு இன்று (நேற்று) வழங்க வேண்டிய முட்டைகளை நாளை (இன்று) வழங்கிக் கொள்ளலாம்’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து சத்துணவு ஊழியர்கள், அவற்றை மொத்தமாக குப்பைத்தொட்டியில் கொட்டினர். இந்த விபரம் தெரிந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சத்துணவு ஊழியர்கள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் 100 முட்டைகளுக்கும் குறையாமல் குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்டன. இவ்வாறு அழுகிய முட்டைகளை கவனக்குறைவாக வாங்குவதால் வீண் செலவு ஏற்படுகிறது. இது தெரியாமல் மாணவ, மாணவிகள் சாப்பிட்டிருந்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: