×

1974 முதல் சென்னையில் தஞ்சம்: ஆதார் வைத்திருந்த நைஜீரியரிடம் புதுச்சேரி போலீஸ் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி  சுனாமி குடியிருப்பில் தங்கி இருக்கும் நைஜீரிய முதியவர் இந்திய அரசின் குடியுரிமை பெறாமல், ஆதார் அடையாள அட்டையை வைத்திருப்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர். சுனாமிக்கு பின் கடலோர பகுதி மீனவ மக்களுக்கு புதுச்சேரி பெரிய  காலாப்பட்டு பகுதியில் சுனாமி குடியிருப்பு கட்டி தரப்பட்டுள்ளது. இங்கு  வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டவரும் தங்குவதாக மீனவ பிரதிநிதிகள் அரசுக்கு  புகார் தெரிவித்து வந்தனர். அதன்படி அதிகாரிகள் சோதனையிட்டபோது, நைஜீரிய  நாட்டை சேர்ந்த முதியவர் மோசஸ் ஆயின்ட் (74) என்பவர் வசிப்பது தெரிய வந்தது. அவரது ஆவணங்களை சரிபார்த்தபோது இந்திய அரசின் ஆதார் அட்டை அவரிடம் இருந்தது.

இதனை  தமிழகத்தில் பெற்றதாகவும், புதுச்சேரிக்கு மாற்றலாகி வந்த போது, முகவரியை  மாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் அவரிடம்  விசாரணை மேற்கொண்டனர். இதில் நைஜீரிய நாட்டை சேர்ந்த இவர் கடந்த 30  ஆண்டுகளாக மேலாக இந்தியாவில் வசித்து வருவதாகவும், தற்போது சுனாமி குடியிருப்பில்  வசித்து வருவதாகவும் தனியார் ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும்  தெரிவித்துள்ளார். இவருக்கு ஆதார் அட்டை கிடைத்தது எப்படி என்பது குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 தொடர் விசாரணையில் அவர் 1974ல் இந்தியா வந்ததும், சென்னையில் கடந்த 45 வருடமாக தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. அவரைத் தொடர்ந்து மோசஸ் ஆயின்ட் தம்பியான ஜோசப் 1983ல் இந்தியா வந்தபோது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து 20 வருடமாக புதுச்சேரியில் குடும்பம் நடத்தி வருவதும், காலாப்பட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அவர் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. கடந்த 6 மாதமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட மோசஸ் ஆயின்ட் பாதுகாப்பு கருதி புதுச்சேரியில் உள்ள தனது தம்பி வீட்டில் தஞ்சமடைந்த தங்கியிருந்போது, சென்னையில் இருந்த ஆதார் கார்டை புதுச்சேரி முகவரிக்கு மாற்றம் செய்தது அம்பலமானது. இதற்காக ரூ.3,000 வரை புரோக்கர் வழியாக கொடுத்து முகவரி மாற்றம் செய்யப்பட்ட தகவலும் போலீசுக்கு கிடைத்துள்ளது.

இருப்பினும் அவரிடம் இந்திய குடியுரிமை பெற்றதற்கான எந்தவொரு ஆவணமும் இல்லாத நிலையில் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கும் தகவல் தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். இதேபோல் இந்திய குடியுரிமை பெறாமல் வெளிநாட்டினர் யாராவது பதுங்கி இருக்கிறார்களா? என்பது தொடர்பாக விசாரிக்கவும் காலாப்பட்டு மட்டுமின்றி கோட்டக்குப்பம் மற்றும் ஆரோவில் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : police investigation ,Chennai ,Puducherry ,Nigerian , Aadhaar
× RELATED கிணற்றில் முதியவர் எலும்புக்கூடு மீட்பு; யார் அவர்? போலீசார் விசாரணை