தென்காசி அருகே பரபரப்பு: காப்பகத்தில் தங்கியிருந்த 4 சிறுமிகள் கடத்தல்?

தென்காசி: தென்காசி காப்பக நிர்வாகி மகள் உட்பட 4 சிறுமிகள் மாயமான விவகாரத்தில், அவர்களை யாராவது கடத்திச் சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தென்காசியை அடுத்த மேலகரம், எழில்நகர் பகுதியில் லைப் சேஞ்ச் பிளசிங் ஹோம் என்ற பெயரில் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தின் நிர்வாகியாக பாலில் ரோஸ் ஜெமிமா (40) என்பவர் இருந்து வருகிறார். இங்கு 20க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் காப்பகத்தில் தங்கியிருந்த நிர்வாகியின் மகள் எஸ்தர், அம்பை வேலாயுதம் நகரைச் சேர்ந்த வில்லியம் மகள் மரிய லிவியா (15), கடையநல்லூர் ரயில்வே பீடர் தெருவைச் சேர்ந்த மணி மகள் அபிநயா (16), இடைகால் கிளாங்காடு பகுதியைச் சேர்ந்த குற்றாலிங்கம் மகள் மணிமேகலை (14) ஆகிய 4 சிறுமிகளை நேற்று அதிகாலை 3 மணி முதல் காணவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள்? என்று தெரியவில்லை.

சிறுமி மரியலிவியா, ஒரு டைரியில் எனக்கு தந்தை இல்லாததால் நான் யாருமற்ற அனாதையாகி விட்டேன் என்று உருக்கமாக எழுதியுள்ளார். அவர் தான் மற்றவர்களை மூளைச் சலவை செய்து ஏதேனும் ஊருக்கு சுற்றுலாவாக அழைத்துச் சென்றிருக்கலாம் என்று காப்பகத்தில் உள்ளவர்கள் சந்தேகிக்கின்றனர். இந்த 4 சிறுமிகளும் குற்றாலத்தில் உள்ள திருமலை குமாரசாமி கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தனர். இதற்கிடையே இந்த 4 சிறுமிகளையும் யாராவது கடத்தினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களை தேடும் பணியில் குற்றாலம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>