மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து தண்டவாளத்தில் ராட்சத பாறை விழுந்ததால் ரத்து

உதகை: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் தண்டவாளத்தில் ராட்சத பாறை விழுந்ததால் இன்று ஒருநாள் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வருவதால் மலை ரயில் பாதையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு கல்லார், ஹாடலி ஹில் குரோவ் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஆர்டலி ஹில் குரோ ரயில் நிலையம் அருகே மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் விழுந்து தண்டவாளம் சேதமானது. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் புறப்பட்டு சென்ற மலை ரயில் நடுக்காட்டில் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து தண்டவாள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ராட்சத பாறையை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்த முடியாததால் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. இதனால் மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதன் காரணமாக இயற்கை அழகை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் கல்லாறு ரயில் நிலையத்திற்கு வந்து சுற்றுலா பயணிகளை ரயில்வே நிா்வாகம் குன்னூா்-உதகைக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா். இதனை தொடர்ந்து ரயில் பாதையை சீரமைக்கும் பணி முற்றிலும் சீரமைப்பிற்கு பின் தான் மீண்டும் இந்த தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என எதிா்ப்பாக்கப்படுகிறது.

Related Stories: