வேலையில்லாத சிலர் தமிழகத்தில் ஆளுமைக்கு வெற்றிடம் நிலவுவதாக கூறுகின்றனர்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல்

மதுரை: வேலையே இல்லாத சில பேர், தமிழகத்தில் ஆளுமைக்கு வெற்றிடம் உள்ளது என்று கூறியுள்ளதாக வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக சாடியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனைகளை விளக்கும் தொடர் ஜோதி பயணம், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கியது. இந்த நடைபயணத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். அவரது தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வேலையே இல்லாத சில பேர் தமிழகத்தில் ஆளுமைக்கு வெற்றிடம் உள்ளது என்று கூறுவதாகவும், தமிழ்நாட்டில் வெற்றிடம் இல்லை.

எடப்படியார் வெற்றி காணும் இடம் தான் தமிழகம் என்றும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், ஆளுமையை சொல்லாலும், செயலாலும், உழைப்பாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்துள்ளார் என்று கூறியுள்ளார். முன்னதாக, கடந்த வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், திருவள்ளுவருக்கு காவி சாயம் போல, எனக்கும் பா.ஜ.க. சாயம் பூச முயற்சிகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டினார். அதுமட்டுமல்லாது, தமிழக அரசியலில் ஆளுமையான, சரியான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது என கூறினார். ரஜினியின் இந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக ஆளுமை குறித்த ரஜினியின் கருத்துக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

Related Stories: