×

மகாராஷ்டிராவை பாஜக-விற்கு தாரை வார்த்த காங்கிரஸ் விரைவில் அழியும்: ஆம் ஆத்மி கட்சி கடும் விமர்சனம்

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்காத காங்கிரஸ் கட்சியை ஆம் ஆத்மி தலைவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனான கூட்டணி அமைத்து  போட்டியிட்டன. இதில், 105 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும், சிவசேனாவின் பிடிவாத நிலைப்பாடு காரணமாக, பாஜகவால் ஆட்சியமைக்க இயலாமல் போனது. இதனால், கால் நூற்றாண்டு காலம் நீடித்த,  பாஜக-சிவசேனா கூட்டணியும் முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாக, மகாராஷ்டிராவில் அதிக இடங்களை பெற்ற கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய ஆதரவு கிடைக்காததால் பாஜக அதனை நிராகரித்தது. இதனையடுத்து ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு  ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை திரட்டும் முயற்சியில் சிவசேனா நேற்று ஈடுபட்டது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை  நடத்தினார். ஆனால், இருகட்சிகளும் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், சிவசேனா தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். சந்திப்பின் போதும் ஆட்சி அமைப்பதற்கு கூடுதல்  கால அவகாசத்தை வழங்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், ஆதரவு எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுக்கப்படவில்லை எனக் கூறி கூடுதல் அவகாசம் வழங்க ஆளுநர் மறுத்துவிட்டார்.

அதனையடுத்து, பாஜக, சிவசேனாவை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் பகத் சிங் கோஷாரி நேற்றிரவு 8.30 மணியளவில் அழைப்பு விடுத்தார். என்சிபி தலைவர்களும் நேற்றிரவே  ஆளுநரை சந்தித்தனர். அப்போது, இன்றிரவு 8.30 மணி வரை ஆட்சி அமைக்க என்சிபிக்கு ஆளுநர் நேரம் வழங்கினார். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் முதல்வர் ஆக வேண்டும் என்றும் அதற்கு சிவசேனா ஆதரவு  அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில், சிவசேனாவை ஆதரிப்பதில் காங்கிரஸ் கட்சியிலே இருவிதமான கருத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. சிவசேனா கட்சியுடன் கூட்டணி  அமைத்தால் சித்தாந்த ரீதியாக வலதுசாரி கண்ணோட்டத்தை ஆதரித்ததாக ஆகிவிடும் என சில காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்த பிறகே ஆட்சி அமைப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் கூறியுள்ளார். நேற்றுவரை காங்கிரஸ் கட்சியின் முடிவுக்காக  காத்திருந்தோம். ஆனால், வரவில்லை. அவர்களை கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றார். முதல்வர் பதவிக்காகத்தான் பாஜக உடன் இணைந்து ஆட்சி அமைக்க மறுத்ததோடு, தற்போது தேசியவாத காங்கிரஸ்  கட்சி கேட்டுக் கொண்டதற்கு இணங்க மத்திய அமைச்சர் பதவியையும் சிவசேனா ராஜினாமா செய்துவிட்டது. சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க தேசியவாத காங்கிரஸ் ஒப்புக்கொண்ட நிலையில், காங்கிரஸ் ஆதரவு அளிக்க தயக்கம்  காட்டிவருகிறது. அதனையடுத்து, மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பரிந்துரை செய்துள்ளார்.

இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி ப்ரித்தி சர்மா மேனன், காங்கிரஸ் கட்சியின் தலைமை அவர்களுடைய கட்சியை தேசத்தை விட முன்னதாக நிறுத்துகிறது.  மக்களவைத் தேர்தலின்போது மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை பிடிவாதமாக மறுத்து பா.ஜ.க வெற்றிபெற உதவியது. தற்போது, மகாராஷ்டிராவை பா.ஜ.கவுக்கு அளித்துவருகிறார்கள். அவர்களுடைய பிடிவாதம் இறுதிக் கட்டத்தை  எட்டியுள்ளது. விரைவில் அது அழியும். மகாராஷ்டிராவிலுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சரத்பவாருடன் இணையவேண்டும். இது காங்கிரஸ் இறப்பதற்கான நேரம்’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Tags : Congress ,Aam Aadmi Party ,Maharashtra ,BJP , Congress will soon destroy Maharashtra's BJP: Aam Aadmi Party
× RELATED முன்மொழிந்தவர்கள் திடீர் பல்டியால்...