ஆஸ்திரேலியாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீக்கு 10,000 கி.மீ தள்ளியுள்ள இந்தியாவில் பருவமழை தாமதமாக முடிவடைந்ததே காரணம்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீக்கு 10,000 கி.மீ தள்ளியுள்ள இந்தியாவில் பருவமழை தாமதமாக முடிவடைந்ததே காரணம் என விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. கொழுந்து விட்டு எரியும் இந்தத் தீ அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதனால் எட்டரை லட்சம் ஹெக்டேர் அளவிலான பகுதிகள் தீயில் பற்றி எரிகின்றன. இந்த தீயில் சிக்கி இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் 150 வீடுகளுக்கும் மேல் எரிந்து, இடிந்து தரைமட்டமாகியுள்ளன. பல லட்சம் மரங்கள் கருகிவிட்டன. கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் சிட்னி உள்ளிட்ட பகுதிகளில் தீயானது அபாய அளவை எட்டியுள்ளது. இந்த காட்டுத்தீயை அணைக்க முடியாமல் அந்நாட்டு தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.

இதனையடுத்து இன்று நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பிரதமர் கிளாடிஸ் பெரெஜிக்லியன், அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த காட்டுத்தீ பேரழிவிற்கான நிலையை அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் இந்த காட்டுத்தீக்கு, 10,000 கிலோமீட்டர் தள்ளியுள்ள இந்தியாவில் பருவமழை தாமதமாக முடிந்ததே காரணம் என்று மெல்போர்ன் பல்கலைகழக விஞ்ஞானி டிரெண்ட் பென்மான் தெரிவித்துள்ளார். உலகின் அனைத்து பகுதிகளும் சூழலியலில் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது. அதனை நம்மால் பிரிக்க முடியாது, என்று கூறியுள்ள அவர், இந்தியாவில் கடந்த காலங்களை காட்டிலும் இந்த ஆண்டு அதிகளவில் மழைப்பொழிவு காணப்பட்டது. மேலும் ஜூனில் துவங்கி செப்டம்பர் மாதத்தில் முடியும் பருவமழை அக்டோபர் மாதம் வரை நீடித்தது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முடிந்தவுடன் தெற்கு நோக்கி நகரவேண்டிய ஈரக்காற்று, இந்த ஆண்டு தாமதமடைந்துள்ளதாக பென்மான் கூறியுள்ளார்.

Related Stories: