×

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை: ஜனாதிபதி ஆட்சியை அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பரிந்துரை

மும்பை: அரசியல் சட்டப்பிரவு 356-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியை மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பரிந்துரை செய்துள்ளார்.  

மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட குழப்பம்:

*288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பா.ஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 44  இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின.

*பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இருந்தும் முதல்வர் பதவி பிரச்னை காரணமாக இந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.  முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள்  பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதம் காட்டியது. ஆனால் பா.ஜ அதற்கு மறுத்துவிட்டது.

*இந்த நிலையில், மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கடந்த வெள்ளிக்கிழமை தனிப்பெரும் கட்சியான பாஜ.வை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய பலம் இல்லாததால் பாஜ அதற்கு மறுத்து விட்டது.

*அதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது நேற்று இரவு 7.30 மணிக்குள் முடிவை தெரிவிக்கும்படியும் ஆளுநர்  கூறியிருந்தார்.

*சிவசேனாவிடம் 56 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருப்பதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பெற அக்கட்சி திட்டமிட்டது. முதல்கட்டமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை உத்தவ் தாக்கரே சந்தித்து  ஆதரவு கோரினார். அப்போது காங்கிரஸ் எடுக்கும் முடிவை பொறுத்துதான் ஆதரவு தருவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று சரத் பவார் கூறினார்.

*இதற்கிடையே, சிவசேனாவுக்கு ஆதரவு தருவது குறித்து கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசுடன் மேற்கொண்டு விவாதிப்பது என காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

*அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவை பெற சிவசேனாவுக்கு கூடுதல் நேரம் வழங்க மறுத்த ஆளுநர், 3வது பெரிய கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார்.  பவார் கட்சிக்கு ஆட்சி அமைக்க 24 மணி நேர அவகாசம் அளித்தார் கவர்னர்.

ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை

இந்நிலையில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாமல், கூட்டணியும் உறுதியாகாமல் இருப்பதால் மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட குழப்ப நிலை நீடித்து வருகிறது. யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து காங்கிரஸ் உயர்நிலைக்  கூட்டம் மீண்டும் கூட உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மராட்டிய மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அறிக்கை அனுப்பி  வைத்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி வெளியிட்ட அறிக்கையில், அரசியல் சட்டப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும் எந்த கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாததால், அரசியல் சட்டப்பிரவு  356-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியை மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பரிந்துரை செய்துள்ளார். சட்டப்படியே தாம் நடந்து கொண்டுள்ளதாகவும் ஆளுநர் பகத்சிங் விளக்கமளித்துள்ளார்.


Tags : party ,government ,Bhagat Singh Koshyari ,Maratham No , No party to form government in Maratham: Governor Bhagat Singh Koshyari
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க உறுதியேற்போம்: திருமாவளவன் அறிக்கை