கழிவுநீர் தொட்டியில் விஷவாயு இருக்கும் சூழல் இருப்பதால் மனிதர்களை ஈடுபடுத்த கூடாது: தீயணைப்புத்துறை இணை இயக்குநர் அறிவுறுத்தல்

சென்னை: கழிவுநீர் தொட்டியில் விஷவாயு இருக்கும் சூழல் இருப்பதால் மனிதர்களை ஈடுபடுத்த கூடாது என்று தீயணைப்புத்துறை இணை இயக்குநர் சாகுல் அமீர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டை அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். சென்னையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மயக்கமடைந்த தம்பியை காப்பாற்றிய அண்ணன் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை ராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஹாப்பிங் மாலின் கீழ் தளத்தில் கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை சுத்தம் செய்வதற்காக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர் அருண்குமார், ரஞ்சித்குமார், யுவராஜ், அஜித்குமார், ஸ்ரீநாத் ஆகிய 5 பேரை அழைத்து சென்றுள்ளார். இவர்களில் ரஞ்சித்குமார் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார்.

இதை கண்ட அவரது அண்ணன் அருண்குமார், தம்பியை காப்பாற்றுவதற்கு கழிவுநீர் தொட்டியில் இறங்கி மேலே தூக்கி விட்டார். பிறகு அவர் மேலே ஏற முயன்றபோது, விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சாலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு இருக்கும் சூழல் இருப்பதால் மனிதர்களை ஈடுபடுத்த கூடாது என தீயணைப்புத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களை கொண்டு சுத்தம் செய்வது என்பது சட்டவிரோதம் என்றும் அது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும் என்றும்  அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய தீயணைப்புத்துறை இணை இயக்குநர் சாகுல் அமீர், பெரிய நிறுவனங்கள் உட்பட அனைவரும் அதிதிறன் கொண்ட உறிஞ்சு இயந்திரங்கள் மூலமே கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கழிவுநீர் தொட்டியில் விஷவாயு இருக்கும் சூழல் இருப்பதால் மனிதர்களை ஒருபோதும் ஈடுபடுத்த கூடாது. தொடர்ந்து, ஏதாவது விபரீதம் நடந்தால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு 101 என்ற தகவல் எண்ணில் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து கழிவுநீர் தொட்டியில் ஒருவர் சிக்கி கொண்டால், அங்கிருப்பவர்கள் ஆபத்தை அறியாது மீட்பு பணிகளில் ஈடுபட கூடாது என்றும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய இறங்கும் தொழிலாளர்கள் விஷவாயு தாக்குதலுக்கு ஆளானால் என்ன செய்ய வேண்டும் என விழிப்புணர்வு கருத்துக்களையும் அவர் கூறியிருக்கிறார்.

Related Stories:

>