மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவகாசம் தரவில்லை : உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனுதாக்கல்

மும்பை: மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவகாசம் தரவில்லை என உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனுதாக்கல் செய்துள்ளது. முன்னதாக மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால், உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என சிவசேனா ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

நீண்ட சிந்தனையில் காங்கிரஸ்.. ஆட்சியமைப்பதில் இழுபறி..

*288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பா.ஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 44 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின.

*பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இருந்தும் முதல்வர் பதவி பிரச்னை காரணமாக இந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.  முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதம் காட்டியது. ஆனால் பா.ஜ அதற்கு மறுத்துவிட்டது.

*இந்த நிலையில், மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கடந்த வெள்ளிக்கிழமை தனிப்பெரும் கட்சியான பாஜ.வை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய பலம் இல்லாததால் பாஜ அதற்கு மறுத்து விட்டது.

*அதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது நேற்று இரவு 7.30 மணிக்குள் முடிவை தெரிவிக்கும்படியும் ஆளுநர் கூறியிருந்தார்.

*சிவசேனாவிடம் 56 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருப்பதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பெற அக்கட்சி திட்டமிட்டது. முதல்கட்டமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை உத்தவ் தாக்கரே சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது காங்கிரஸ் எடுக்கும் முடிவை பொறுத்துதான் ஆதரவு தருவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று சரத் பவார் கூறினார்.

*இதற்கிடையே, சிவசேனாவுக்கு ஆதரவு தருவது குறித்து கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசுடன் மேற்கொண்டு விவாதிப்பது என காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

*அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவை பெற சிவசேனாவுக்கு கூடுதல் நேரம் வழங்க மறுத்த ஆளுநர், 3வது பெரிய கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். பவார் கட்சிக்கு ஆட்சி அமைக்க 24 மணி நேர அவகாசம் அளித்தார் கவர்னர்.

*மராட்டியத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பலம் எந்தக் கட்சிக்கும் இல்லாததால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்துள்ளார்.

*சட்டப்பேரவை பதவிக் காலம் நவம்பர் 9ம் தேதியுடன் முடிந்துவிட்டதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.

*இதையடுத்து மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு வவிடுத்தார். பிரதமர் இன்று பிரேசில் செல்ல உள்ள நிலையில் அவசர அமைச்சரவை கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகாராஷ்டிர நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

*இந்த நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

*தேசியவாத காங்கிரசுக்கு கொடுத்த கெடு முடிவடையாத நிலையில் எப்படி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முடியும் என்பது கட்சிகளின் கேள்வி.

*அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர சிவசேனா முடிவு செய்தது.

*உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து அகமது பட்டேல், கபில்சிபலுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினர்.

*இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவகாசம் தரவில்லை என உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மனுதாக்கல் செய்துள்ளார். முன்னதாக பெரும்பான்மைக்கான கடிதத்தை தர 3 நாட்கள் அவகாசம் அளிக்க மகாராஷ்டிரா ஆளுநர் மறுப்பு தெரிவித்து இருந்தார்.

*மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு முறையிடவும் சிவசேனா திட்டமிட்டுள்ளது.

Related Stories: