×

நீண்ட சிந்தனையில் காங்கிரஸ்.. ஆட்சியமைப்பதில் இழுபறி.. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை.. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு

மும்பை: மராட்டியத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பலம் எந்தக் கட்சிக்கும் இல்லாததால் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்துள்ளார்.105 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற்று உள்ள பாஜக மராட்டியத்தில் ஆட்சியமைக்க முன்வரவில்லை.

மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட குழப்பம்


*288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பா.ஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 44 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின.

*பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இருந்தும் முதல்வர் பதவி பிரச்னை காரணமாக இந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.  முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதம் காட்டியது. ஆனால் பா.ஜ அதற்கு மறுத்துவிட்டது.

*இந்த நிலையில், மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கடந்த வெள்ளிக்கிழமை தனிப்பெரும் கட்சியான பாஜ.வை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய பலம் இல்லாததால் பாஜ அதற்கு மறுத்து விட்டது.

*அதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது நேற்று இரவு 7.30 மணிக்குள் முடிவை தெரிவிக்கும்படியும் ஆளுநர் கூறியிருந்தார்.

*சிவசேனாவிடம் 56 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருப்பதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பெற அக்கட்சி திட்டமிட்டது. முதல்கட்டமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை உத்தவ் தாக்கரே சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது காங்கிரஸ் எடுக்கும் முடிவை பொறுத்துதான் ஆதரவு தருவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று சரத் பவார் கூறினார்.

*இதற்கிடையே, சிவசேனாவுக்கு ஆதரவு தருவது குறித்து கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசுடன் மேற்கொண்டு விவாதிப்பது என காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

*அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவை பெற சிவசேனாவுக்கு கூடுதல் நேரம் வழங்க மறுத்த ஆளுநர், 3வது பெரிய கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். பவார் கட்சிக்கு ஆட்சி அமைக்க 24 மணி நேர அவகாசம் அளித்தார் கவர்னர்.

ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை


இந்நிலையில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாமல், கூட்டணியும் உறுதியாகாமல் இருப்பதால் மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட குழப்ப நிலை நீடித்து வருகிறது. யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டம் மீண்டும் கூட உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மராட்டிய மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க யாரும் முன்வராத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை பதவிக் காலம் முடிந்துவிட்டதால் மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார். மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைத்ததாக தகவல் வெளியான நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் இன்று பிரேசில் செல்ல உள்ள நிலையில் அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மகாராஷ்டிர நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.


Tags : Congress ,President ,Republican , Presidential Ruling, Shiv Sena, Nationalist Congress, Nomination, Maratham, Governor, Bhagat Singh Koshyari, Nomination, Ruling, Congress, BJP
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...