வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும்: சென்னை வானிலை மையம்

சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. அக்டோபர் இறுதியிலும், நவம்பர் தொடக்கத்திலும் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் 3 புயல்கள் உருவாகி தமிழகத்தை விட்டு விலகிச் சென்றன அதனால், கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் குறிப்பிடும்படியாக மழை இல்லை. வங்கக் கடலில் உருவாகி, மேற்கு வங்கம் நோக்கி சென்றுள்ள புல்புல் புயல் செயலிழந்த பிறகே, தமிழகத்தில் மீண்டும் மழை வாய்ப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மிதமானது முதல் லேசான மழை பெய்யும். குறிப்பாக கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி மற்றும் கோவை மாவட்டம் ஆழியாரில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், நீலகிரி மாவட்டம் பாலியாரில் 6 செ.மீ மழையும், விருதுநகர் மாவட்டம் வாட்ராப்பில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: