சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு

சென்னை: சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் சந்தித்து பேசினர். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், இன்று ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து பேசினார். இதே போல் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனும் ஸ்டாலினை சந்தித்தார்.

அப்போது விரைவில் வர உள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம பேசிய திருமாவளவனிடம், உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும என்று மட்டும் கூறினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், ஸ்டாலின் உடனான சந்திப்பின் போது உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசவில்லை என்றார். அதே சமயம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் திமுக தலைமையில் எதிர்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Stories:

>