தருமபுரி மாவட்டம் ஆரூர் அருகே சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி வரும் கிராம மக்கள்: தொடரும் உயிரிழப்புகள்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், வேடகட்டமடுவு ஊராட்சியில் டி.ஆண்டியூர், டி.அம்மாபேட்டை, முல்லைவனம், மொண்டுகுழி உள்ளிட்ட 18 கிராமங்கள் உள்ளன. இதில் மொண்டுக்குழி கிராமத்தில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கழிவுநீர் கால்வாய், சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த கிராமத்தில் உள்ள மக்கள், இன்றும் பல ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட கிணற்றில் உள்ள தண்ணீரைதான் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறியுடன் பலர் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சென்றதாகவும் அப்போது அங்கு பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர், சிறுநீரக பாதிப்புக்கு காரணம் என்ன? என கண்டறிய, கிராமத்திற்கு வந்து, அவர்கள் பயன்படுத்தும் தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த ஆய்வில், மொண்டுக்குழி கிராமத்தில் உள்ள தண்ணீரில் அதிகளவில் புளோரைடு இருப்பது தெரிய வந்ததாகவும் அதனால் தான் உங்களுக்கு இதுபோன்ற பிரச்சிணைகள் வருகிறது என மருத்துவர் அறிவுறுத்தியதாகவும் கூறுகின்றனர். ஆனால் மருத்துவர் எச்சரித்தும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும் தற்போது சிறுநீரகத்தில் கற்கள், சிறுநீரகம் செயலிழத்தல் அதிகரித்து வருவதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது மொண்டுகுழி கிராமத்தில் தொடரும் சிறுநீரக பாதிப்பால் 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும்,  எனவே உடனடியாக மருத்துவர் குழு இங்கு ஆராய்ச்சி நடத்தி தொடர் உயிரிழப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: