பஞ்சாபில் பதுங்கியிருந்த 2 காலிஸ்தான் தீவிரவாதிகள் கைது: இந்து தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருந்தது கண்டுபிடிப்பு!

சண்டிகர்: பஞ்சாப் பதுங்கியிருந்த 2 காலிஸ்தான் தீவிரவாதிகளை அம்மாநில ஆயுதப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சீக்கியர்கள் அதிகமாக வாழ்ந்து வரும் பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் இயக்கம் சார்பில் தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அவ்வப்போது போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாது, இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களிலும் ஈடுபடுவது வழக்கமாகும். இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது. அந்த வகையில், பஞ்சாபில் பதுங்கியிருந்த பெண் உள்பட 2 காலிஸ்தான் தீவிரவாதிகளை அம்மாநில ஆயுதப்படை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சுரேந்தர் கவுர் என்பதும், ஃபரித்கோட் பகுதியை சேர்ந்த இவர் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. அதேபோல், சுரேந்தர் கவுரின் ஆண் நண்பரான ஹோஷியார்பூரைச் சேர்ந்த லக்பீர் சிங், துபாயில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சமூகவலைதள நண்பர்கள் எனவும், இவர்களின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கடந்த ஒரு மாதமாக பஞ்சாப் காவல்துறையின் சைபர் கிரைம் செல் கவணித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கு பஞ்சாபில் தீவிரவாதத்தை பரப்பும் பணி கொடுக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமட்டுமல்லாது, மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாட்டு நிதியை பெற்றுள்ள இவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து தலைவர்கள் சிலரை இவர்கள் கொல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ள போலீசார், விசாரணையில் இடையூறு ஏற்படக்கூடும் என்பதால் அந்த தலைவர்களின் பெயரை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதிகள் இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இருவரையும் இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து, சுரேந்தர் கவுர் மற்றும் லக்பீர் சிங்கிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>