செப்டம்பரில் இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் இல்லாத சரிவு; நெருக்கடியில் பாஜக அரசு

டெல்லி : கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவாக இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி 4.3% குறைந்து உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஐஐபி எனப்படும் தொழில்துறை உற்பத்தி குறியீடு என்பது இந்தியாவின் ஒரு பொருளாதார குறியீடாகும். சுரங்கம், மின்சாரம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியை இது சுட்டிக் காட்டுகிறது. இந்நிலையில் தொழில்துறை உற்பத்தி குறித்து புள்ளிவிவரத்தை மத்திய புள்ளியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய துறைகளில் உற்பத்தி சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் மேற்கண்ட 8 துறைகளின் பங்கு 40 சதவீதம் உள்ளது. அதனால் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி குறைந்தாலும், ஏற்றம் கண்டாலும் அதன் தாக்கம் தொழில்துறை உற்பத்தியில் வெளிப்படும். கடந்த செப்டம்பரில் இந்த 8 துறைகளிலும் தொழில் உற்பத்தி 4.3% குறைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தொழில்துறை உற்பத்தி கடந்த ஆக., மாதத்தில் 1.1 சதவீதம் சரிவை சந்தித்தது. சென்ற ஆண்டு இதே காலக்கட்டத்தில் இதே துறைகளில் வளர்ச்சி விகிதம் 5.2% ஆக இருந்தது. இந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் மட்டும் இத்துறை வெறும் 1.3% மட்டுமே வளர்ச்சியை கண்டிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: