தந்தையின் உடல்நலம் கருதி ஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்

வேலூர் : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலிருந்து பேரறிவாளன் ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை தங்கவேல் தெருவைச் சேர்ந்தவர் குயில்தாசன் - அற்புதம்மாள். அவர்களது மகன் பேரறிவாளன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐயால் பேரறிவாளன் கடந்த 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். பேரறிவாளனை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு அவரது தாயார் அற்புதம்மாள் முயற்சி செய்து வருகிறார். சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

நீதிமன்றத்தால் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்.14-ல் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் கடந்த 2017 ஆகஸ்ட் 4-ல் ஒரு மாத பரோல் வழங்கப்பட்டது. பின்னர், மேலும் ஒரு மாதத்துக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறி அற்புதம்மாள் குடும்பத்தினர் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழக சிறைத்துறைக்கு விண்ணப்பித்தனர்.

இதையடுத்து, அவருக்கு ஒரு மாத பரோல் கிடைத்துள்ளது. இதனால் புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் இன்று காலை வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். அவர் கடந்த முறை பரோலில் வெளியே வந்தபோது விதிக்கப்பட்ட விதிமுறைகள் இந்த முறையும் பின்பற்றப்படும் எனத் தெரிகிறது. மேலும் திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலு மற்றும் மாவட்ட எஸ்.பி. பிரவேஷ்குமார் அறிவுறுத்தலின்பேரில் பேரறிவாளன் வீட்டைச் சுற்றி போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

Related Stories:

>