×

சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: சிதறியடித்து ஓடிய பயணிகள்

சென்னை: சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் இரண்டு பேர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் 100 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது கொரட்டூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் நடைமேடையில் திடீரென கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் அங்கிருந்த இளைஞர் ஒருவரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ரயில் பயணிகள் சிதறி ஓடினர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அந்த இளைஞரை விட்டு விட்டு இருவரும் தப்பி சென்றனர். வெட்டு காயம் பட்டவரை அங்கிருந்தவர்கள் தூக்க சென்றபோது அவரும் ரத்த வெள்ளத்தில் வெட்டு காயத்துடன் தப்பிச் சென்றார். இந்த சம்பவத்தால் ரயில் நிலையம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து கொரட்டூர் காவல்துறை மற்றும் பெரம்பூர் ரயில்வே காவல் துறையினர் வெட்டியது யார், வெட்டுப்பட்டது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொள்வது வாடிக்கையாகியுள்ளது. இதனால் கொரட்டூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவமும் கல்லூரி மாணவர்கள் மோதலாக இருக்குமோ என காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

Tags : Sirasthala Railway Station ,Chennai ,Korattur Railway Station , Chennai, Korattur Railway Station, youth, sickle cut
× RELATED சென்னையில் ஊரடங்கு காரணமாக மனைவியுடன் ஆடு திருடிய நபர் கைது!!!