×

தொடர் தோல்வி எதிரொலி,..சென்னை எப்சி அணியின் பயிற்சியாளர் கிரிகோரி விலகுகிறார்?

சென்னை: ஐஎஸ்எல் தொடரில் விளையாடும் சென்னையின் எப்சி  அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி, தொடர் தோல்விகளால் பதவி விலக முடிவு செய்துள்ளார்.  இங்கிலாந்தை சேர்ந்த கிரிகோரி சென்னை அணியின் பயிற்சியாளராக 2017ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2017-18 சீசனில் சென்னை 2வது முறையாக ஐஎஸ்எல் கோப்பையை வென்றது. 2018-19 சீசனிலும் அவரே பயிற்சியாளராக தொடர்ந்த நிலையில், அதில் 2 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. அதனால் கிரிகோரி மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடப்பு சீசன் 2019-20லும் அவரே தலைமை பயிற்சியாளராக தொடர்வார் என அணி நிர்வாகம் அறிவித்தது. அவரும் உற்சாகமாக அணியில் ஏகப்பட்ட மாற்றங்களை மேற்கொண்டார். பழைய வீரர்கள் நீக்கப்பட்டு புதிய வீரர்கள் களம் கண்டனர். அவர்களும் களத்தில் உற்சாகமாக விளையாடி எதிரணியை திணறடித்தனர்.

எனினும், முதல் 3 போட்டிகளில் ஒரு தோல்வி, 2 டிரா கண்ட சென்னை அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் சென்னை வெற்றி கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த போட்டியில் பெங்களூரு 3-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.  சென்னை சிறப்பாக விளையாடினாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. வெறுத்துப்போன பயிற்சியாளர் கிரிகோரி, ‘இனி அணியை வேறொருவர் வழி நடத்த இதுவே சரியான தருணம். அணி நிர்வாகம் எனக்கு ஆதரவாக இருந்தாலும் இதுபோன்ற நிலையில் தொடர முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அணி நிர்வாகம் அவருடன் பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்த சீசன் முழுவதும் அவரையே தொடரச்  செய்வது, அல்லது புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் வரையாவது தொடர வேண்டும் என கேட்டுக் கொள்ள முடிவெடுத்துள்ளதாம். உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளதால், ஐஎஸ்எல் தொடரில் நவ. 22ம் தேதி வரை இடைவெளி விடப்பட்டுள்ளது. எனவே சென்னை வரும் 25ம் தேதிதான் அடுத்த போட்டியில் விளையாட உள்ளது. அதற்குள் பயிற்சியாளர் யார் என தெரிந்துவிடும்.

Tags : Gregory ,coach ,Chennai FC ,Echoing , Chennai FC Team, Coach, Gregory
× RELATED விராத் இல்லாததில் மகிழ்ச்சி இல்லை......