×

சையது முஷ்டாக் அலி டிராபி தமிழகம் அதிர்ச்சி தோல்வி

திருவனந்தபுரம்: சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழக அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் உத்தரப்பிரதேச அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - உத்தரப்பிரதேசம் அணிகல் மோதின. டாசில் வென்ற உ.பி. அணி முதலில் பந்துவீசியது. முரளீ விஜய், ஜெகதீசன் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஜெகதீசன் 2 ரன்னில் வெளியேற, விஜய் - கேப்டன் தினேஷ் கார்த்திக் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். விஜய் 51 ரன் (42 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), கார்த்திக்  61 ரன் (41 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.  விஜய் சங்கர் 28 ரன் எடுக்க, மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். தமிழக அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்தது. உத்தரப்பிரதேச அணி பந்துவீச்சில் அங்கித் ராஜ்புத், மோசின் கான், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய உ.பி. அணி கடுமையாகப் போராடி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. அக்‌ஷதீப் நாத் 25, கேப்டன் சமர்த் சிங் 21, ஆர்.கே.சிங் 16, ஷுபம் சவுபே 35 ரன் எடுத்தனர். 2வது வீரராகக் களமிறங்கி அபாரமாக விளையாடிய  உபேந்திரா யாதவ் 70 ரன் (41 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழகத்தின்  பெரியசாமி 2, நடராஜன், முருகன் அஸ்வின், முகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். உ.பி. அணி 4 புள்ளிகளை தட்டிச் சென்றது.

புதுச்சேரி அசத்தல்
டி பிரிவில் இடம்  பெற்றுள்ள புதுச்சேரி - மிசோராம் இடையிலான லீக் போட்டி நேற்று மும்பையில் நடந்தது. முதலில் விளையாடிய புதுச்சேரி 20ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155  ரன் எடுத்தது. அதிகபட்சமாக   ஆனந்த் 42 ரன் விளாசினார். கேப்டன் ரோகித் 39, டோக்ரா 31 ரன் எடுத்தனர். மிசோராமின் சுமித் லம்பா 3, லால்மாங்கியா 2, லால்ருய்செலா ஒரு விக்கெட் எடுத்தனர்.தொடர்ந்து விளையாடிய  மிசோராம் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 124 ரன் மட்டுமே எடுத்தது. அதனால்  புதுச்சேரி 31 ரன் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் தருவர் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 76 ரன், கேப்டன் பவன் 26 ரன்  எடுத்தனர். புதுச்சேரியின் ஆஷித் ராஜீவ் 2, பாபித் அகமது ஒரு விக்கெட்  வீழ்த்தினர். புதுச்சேரி  தொடர்ந்து 2வது போட்டியில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.Tags : Syed Mushtaq Ali Trophy ,Tamil Nadu , Syed Mushtaq Alitrafi, Tamil Nadu
× RELATED தமிழகத்தில் வரும் 13ம் தேதி நடைபெறும்:...