×

கனவு நனவானது...சாஹர் தந்தை பெருமிதம்

புதுடெல்லி: வங்கதேச அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்த இந்திய வேகம் தீபக் சாஹரின் தந்தை லோகேந்திரசிங் சாஹர் தங்கள் இருவரின் கனவும் நனவாகி இருப்பதாக பெருமிதத்துடன் கூறியுள்ளார். நாக்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், அபாரமாகப் பந்துவீசிய தீபக் சாஹர் (27 வயது) 3.2 ஓவரில் 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். பரபரப்பான கடைசி கட்டத்தில் ஷபியுல் இஸ்லாம் (4), முஸ்டாபிசுர் ரகுமான் (1), அமினுல் இஸ்லாம் (9) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். சர்வதேச டி20ல் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையுடன், டி20ல் மிகச் சிறந்த பந்துவீச்சாக்கான உலக சாதனையும் அவர் வசமானது.

இது குறித்து தீபக் சாஹரின் தந்தையும் இந்திய விமானப் படை முன்னாள் ஊழியருமான லோகேந்திரசிங் சாஹர் கூறியதாவது: வங்கதேசத்துக்கு எதிராக தீபக் சாதனை படைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் இருவரது கனவும் தற்போது நனவாகத் தொடங்கி இருக்கிறது. கடந்த காலங்களில் காயங்களால் அவர் அவதிப்பட்டபோது மிகவும் வேதனைப்பட்டேன். அவற்றில் இருந்து மீண்டு வந்து சாதித்துள்ளார். ஐபிஎல் தொடரில் டோனி, பிராவோ போன்ற மகத்தான வீரர்கள் கொடுத்த ஊக்கம் திருப்பு முனையாக அமைந்தது. பந்தை ஸ்விங் செய்வதில் தீபக் வல்லவர். அவரது வளர்ச்சிக்காக எனது விமானப்படை பணியையும் ராஜினாமா செய்துவிட்டேன். நான் கிரிக்கெட் வீரனாக விரும்பியபோது எனது தந்தை அதற்கு அனுமதிக்கவில்லை.

 ஆனால், என் மகனின் கனவு நனவாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். கடும் பயிற்சி காரணமாக 8ம் வகுப்புக்கு மேல் படிப்பில் தீபக் கவனம் செலுத்த முடியாததுடன், கல்லூரி படிப்பையும் அவரால் முடிக்க முடியாமல் போய்விட்டது. அவருக்கு இப்போது 27 வயது தான் ஆகிறது. இன்னும் நிறைய சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

Tags : Sahar , dream comes true,Saha
× RELATED வாழ்வென்பது பெருங்கனவு!