×

தேர்தலில் முறைகேடால் மக்கள் போராட்டம்: பொலிவியா அதிபர் ராஜினாமா

லா  பாஸ்: பொலிவியா நாட்டு அதிபர் இவோ மொரேல்சுக்கு எதிராக  மக்கள் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து அவர் தனது பதவியை நேற்று ராஜினாமா  செய்தார். தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த 20ம் தேதி  அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் இவோ மொரேல்ஸ் 4வது முறையாக, மீண்டும் அதிபராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு  நடந்திருப்பதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சியினர் அதிபர் மாளிகை முன்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனிடையே,  `பொலிவியாவில் நடந்த அதிபர் தேர்தல் வாக்கு  எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. எனவே அங்கு மீண்டும் தேர்தல்  நடத்தப்பட வேண்டும்’ என்று தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு நேற்று  முன்தினம் அறிவித்தது.

இதையடுத்து மறுதேர்தல் நடத்த அதிபர் இவோ  மொரேல்ஸ் ஒப்புக் கொண்டார். ஆனால், `மறுதேர்தல் நடத்துவது மட்டும் போதாது,  அதிபர் பதவி விலக வேண்டும்’ என்று ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் வில்லியம்ஸ்  கலிமான் தெரிவித்தார். இவோ மொரேல்ஸ் பதவி விலக வலியுறுத்தி மக்கள் சாலைகளில் இறங்கி போராடத் தொடங்கினர். இந்நிலையில், இவோ மொரேல்ஸ் தனது பதவியை  ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். இதனை வரவேற்று லா பாஸ் உள்பட நாடு  முழுவதும் உள்ள நகரங்களில் காரின் ஒலிப்பான்களை ஒலித்தும், பொலிவியா  கொடிகளை அசைத்தும், பட்டாசு வெடித்தும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினர். அதிபரைத் தொடர்ந்து துணை அதிபர், சுரங்கம்,  ஹைட்ரோகார்பன் துறைகளின் அமைச்சர்கள், அரசுக்கு ஆதரவளித்த 3 எம்பி.க்களும்  பதவி விலகுவதாக அறிவித்தனர்.

அதிபருக்கு கைது வாரன்ட்
கடந்த 3 வாரங்களாக மக்கள் போராட்டத்தை முன்னின்று நடத்திய கன்சர்வேடிவ் கட்சி தலைவர் லூயிஸ் பெர்னாண்டோ கமாசோ தனது டிவிட்டர் பதிவில், `அதிபர் இவோ மொரேல்சுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிபரது விமானத்தை ராணுவம் திரும்ப பெற்றுள்ளது. அதிபர் சபாரேயில் தலைமறைவாக பதுங்கி உள்ளார். அவரைத் தேடி ராணுவம் சபாரே சென்றுள்ளது’ என கூறியுள்ளார்.Tags : Chancellor ,Bolivian , Election scandal, mass struggle, resignation of Bolivian Chancellor
× RELATED மீன்வளத்தை பாதுகாக்க புதிய...