குருவாயூர் கோயிலில் ஒரேநாளில் 183 திருமணம்

திருவனந்தபுரம்: குருவாயூர் கோயிலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 183 திருமணங்கள் நடந்தன. பக்தர்களின் கூட்டத்தால் நகரம் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியது. கேரளாவில் பிரசித்திபெற்ற கோயில்களில் குருவாயூர் கிருஷ்ணன் சுவாமி கோயிலும் ஒன்று. இங்கு முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் நல்ல முகூர்த்த நாள். இதனால் திருமணம் உள்பட பல சுபநிகழ்ச்சிகள் நடந்தன. இதேபோல குருவாயூர் கோயிலிலும் திருமணம் நடத்த ஏராளமானோர் முன்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 183 ஜோடிகளுக்கு குருவாயூர் கோயிலில் திருமணம் நடந்தது. 790 குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.

Advertising
Advertising

இது தவிர ரூ.16.24 லட்சத்துக்கு துலாபாரம், 5 லட்சம் மதிப்புள்ள பால் பாயாசம் வழிபாடு, 1.54 லட்சத்துக்கு நெய் பாயாசம் வழிபாடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. குருவாயூர் கோயிலில் 3,000 மற்றும் 5,000 செலுத்தினால் பக்தர்கள் வரிசையில் காத்து நிற்காமல் விரைந்து சுவாமியை தரிசனம் செய்யலாம். இதன்படி நேற்று ஒரே நாளில் 6.88 லட்சம் வருமானம் கிடைத்தது. கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

Related Stories: