புழல் இரட்டைமலை சீனிவாசன் தெருவில் புதர் மண்டி பழுதடைந்த குடிநீர் தொட்டி: சீரமைக்க வலியுறுத்தல்

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம், 23வது வார்டு புழல் இரட்டைமலை சீனிவாசன் தெரு - திருவீதி அம்மன் கோயில் தெரு சந்திக்கும் புழல் கால்பந்தாட்ட திடல் அருகே ஆழ்துளை கிணறுடன் குடிநீர் தொட்டி உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் தினசரி வந்து குடிநீர் எடுத்து சென்றனர். இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன் குழாய் பழுதடைந்ததால் தண்ணீர் எடுத்துச் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதை சரிசெய்யக்கோரி சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மாதவரம் மண்டலத்தில் புகார் தெரிவித்தும் பலனில்லை. இதனால் குடிநீர் தொட்டி சுற்றிசெடிகள் வளர்ந்து புதர் போல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் ஆழ்துளை கிணற்றை சுற்றி உள்ள செடிகளை அகற்றி பொதுமக்கள் குடிநீர் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதேபோல், சோழவரம் ஒன்றியம் அத்திப்பேடு ஊராட்சி அம்பேத்கர் தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இதன்மூலம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தண்ணீர் எடுத்து வந்த நிலையில், இது பழுதானதால் இதில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாடுகளை கட்டியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணறுகளை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில ஆழ்துளை கிணறுகள் பழுதடைந்தாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. இதனால் பழுதடைந்துள்ள இந்த குடிநீர் தொட்டிகள் செடிகள் வளர்ந்து வருவதால் விஷப்பூச்சிகள் உருவாகும் அவல நிலை உள்ளது. இந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்தி பலர் பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அந்தந்த துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டிகளை சீர்செய்து பொதுமக்கள் குடிநீர் பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றனர்.

Related Stories: