பெரம்பூர் அகரம், எஸ்.ஆர்.பி காலனி பேருந்து நிறுத்தத்தில் குப்பை தொட்டியால் துர்நாற்றம் : பயணிகள், மாணவர்கள் அவதி

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் அடுத்த அகரம் பேருந்து நிறுத்தம் மற்றும் எஸ்.ஆர்.பி காலனி பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி குப்பை தொட்டிகளால் பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மழைக்காலங்களில் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காய்ச்சலுக்கு அசுத்தமான இடங்களும், குப்பைகளுமே முக்கிய காரணம் என்றும் நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்கும் பட்சத்தில் காய்ச்சல் பரவுவதை தடுக்கலாம் என்பதே மருத்துவர்களின் முக்கிய ஆலோசனையாகயும் உள்ளது. இந்நிலையில், திருவிக நகர் 6வது மண்டலம் சார்பில் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான புளியந்தோப்பு, பெரம்பூர், திருவிக நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 700க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த குப்பை தொட்டிகள் பெரும்பாலும் மாநகராட்சி பூங்கா, தேவாலயம் மற்றும் கோயில் வாயில் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளன.   குறிப்பாக  பெரம்பூர் அகரம் மற்றும் எஸ்.ஆர்.பி.காலனி பேருந்து நிறுத்தங்களில் மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் உள்ள குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அங்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதியடைகின்றனர். மேலும், இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள்  தெரிவிக்கின்றனர். இந்த குப்பைத் தொட்டிகளை அகற்றி வேறு இடத்தில் மாற்றி வைக்கவேண்டும் என பயணிகள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிகாரிகள் அலட்சியம்

பேருந்து நிறுத்தங்களில் பயணிகளுக்கு இடையூறாக உள்ள குப்பை தொட்டிகளை அகற்றி வேறு இடத்தில் வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. குப்பை தொட்டிகள் அகற்றப்படாவிட்டால் அந்த குப்பை தொட்டிகளை சாலையில் வைத்து மறியல் செய்யநேரிடும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>