கொருக்குப்பேட்டை பகுதியில் சாலையை சீரமைக்க கோரி மறியல்: பொதுமக்கள் கைது

தண்டையார்பேட்டை: கொருக்குப்ேபட்டை பகுதியில் சாலையை சீரமைக்கக்கோரி மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். சென்னை தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, கருமாரியம்மன்நகர் மற்றும் கண்ணகிநகர் பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட தெருக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி சாலைகள் குண்டும், குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். பழுதான சாலைகளை சரிசெய்யக்கோரி இப்பகுதி மக்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதுபற்றி புகார் மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதி செயலாளர் லோகநாதன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொருக்குப்பேட்டை - மணலி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக கொடுங்கையூர், மூலக்கடை, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை மற்றும் திருவொற்றியூர் பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராஜ் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் கலைந்து செல்லாமல் தொடந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை கைது செய்து கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்தனர். பின்னர் அவர்களை போலீஸ் ஜீப்பில் ஏற்றியபோது பழுதாகி நின்றதால் தள்ளிக்கொண்டு சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “எங்கள் பகுதி தெருக்களில் சாலைகள் பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி 4வது மண்டலம், 41வது வார்டுக்கு உட்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மோசமான சாலையால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பலமுறை போராட்டம் நடத்தியபோது போலீசார் மட்டுமே வந்து சமாதானம் பேசினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருவதில்லை. கடந்த 6 மாதத்துக்கு முன்பு போராட்டம் நடத்தியபோது, அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இன்னும் நடவடிக்கை எடுக்காததால் மறியலில் ஈடுபட்டோம்” என்றனர்.

பஸ் நிறுத்தத்தை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்

அண்ணாநகர் திருமங்கலம் சாலையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பள்ளியின் முன்பு சென்னை மாநகர  பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பஸ்  நிறுத்தத்தை அகற்றக்கோரி மக்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் வழக்கறிஞர் சாந்தகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வர  காலதாமதமானதால் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வில்லிவாக்கம் சேர்ந்தவர் வழக்கறிஞர் சாந்தகுமார் (43), அன்பு (25), குமரன் (38), பாஸ்கர் (51), சந்தானம் (52), ரஜினி (எ) ராஜவேலு (55), சினிவாசன் (49), ராஜேஷ் (34), ராஜேந்திரன் (55) உட்பட 13 பேரை கைது செய்து, பின்னர் மாலையில் அவர்களை விடுதலை செய்தனர்.

அதிமுகவினர் மிரட்டல்

பொதுமக்கள் மறியலின்போது அங்கு அதிமுகவினர் வந்தனர்.  அவர்கள் பொதுமக்களிடம், “மறியலில் ஈடுபடாதீர்கள்” என்று அடித்து விரட்டினர். இதனால் பொதுமக்களுக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுமக்கள் தொடர்ந்து, “நாங்கள் மறியலில் ஈடுபடுவோம். எங்களுக்கு சாலையை சரி செய்ய வேண்டும். இதை சரிசெய்யும் வரை எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது” என்று ஆவேசமாக பேசினர்.  இதை அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் வேடிக்கை பார்த்தனர்.

Related Stories: