ஐஐடி விடுதியில் கேரள மாணவி தற்கொலை விவகாரம்,..பேராசிரியர்கள் மீது சந்தேகம் என பெற்றோர் புகார்: போலீசார் தீவிர விசாரணை

சென்னை: சென்னை ஐஐடியில் நாடுமுழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். கேரள மாநிலம், கொல்லம், கிளிகொல்லூர் கிராமத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப்(18) என்ற மாணவி எம்.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். வெளிமாநிலம் என்பதால் ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். கடந்த மாதம் நடந்த தேர்வில் மாணவி பாத்திமா லத்தீப் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது தாய் சஜிதா லத்தீப்பிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது தாய் ஒழுங்காக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளனர். அதன் பிறகு மாணவி கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பாத்திமா லத்தீப் விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கேரளாவில் உள்ள மாணவியின் ெபற்றோருக்கு போலீசார் தகவல் அளித்தனர். பிறகு மாணவியின் அறை முழுவதும் போலீசார் சோதனை செய்த போது தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதம் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில் உள்ளது குறித்து போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். அதன்படி நேற்று முன்தினம் விரைந்து வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினரான கொல்லம் மாநகராட்சி மேயர் ராஜேந்திர பாபு கோட்டூர்புரம் காவல் நிலையத்தல் புகார் ஒன்று அளித்துள்ளனர்.

இந்த புகாரில், எங்கள் மகள் தைரியமானவர், தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அவருக்கு எந்த பிரச்னையும் கிடையாது. தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக அவர், தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தின் படி போலீசார் முறையாக விசாரணை நடத்த வேண்டும். கடந்த ஓராண்டில் ஐஐடியில் 5 மாணவிகள் விடுதியில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் எங்களுக்கு ஐஐடி பேராசிரியர்கள் மீது தான் சந்தேகம் உள்ளது. எனவே பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். என்று புகாரில் கூறியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் மாணவி தற்கொலை குறித்து ஐஐடி பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் தான் மாணவி தற்கொலை குறித்து முழு விபரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மாணவியின் உடல் சொந்த ஊரில் அடக்கம் ெசய்யப்பட்டது.

Related Stories: