×

கோபி பகுதிகளில் பலத்த மழை 3 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின: போக்குவரத்து துண்டிப்பு

கோபி: கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், அத்தாணி, டி.என்.பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கணக்கம்பாளையம் மற்றும் டி.என்.பாளையம் வன பகுதியிலும் நேற்று கனமழை பெய்தது. வன பகுதியில் பெய்யும் மழை நீரானது பத்துக்கும் மேற்பட்ட காற்றாறுகள் மூலம் வேதபாறை பள்ளம் வழியாக பவானி ஆற்றில் கலந்து வீணாகி வருகிறது. இந்த வெள்ள நீரால் சத்தி-அத்தாணி சாலையில் கொண்டையம்பாளையம் என்ற இடத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது.  பாலத்தின் மேல் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றதால் போக்குவரத்து சுமார் இரண்டு மணி நேரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.

இதேபோல், கனமழையால் கணக்கம்பாளையம் பகுதியிலும் 2 தரைப்பாலங்கள் மூழ்கியது. கணக்கப்பாளையம் கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.கொடிவேரி அணைக்கு பூட்டு: பவானிசாகர் அணை முழு கொள்ளளவான 105 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது. தற்போது 4,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி அணையில் பாதுகாப்பு தடுப்பை தாண்டி தண்ணீர் விழுகிறது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்குள் செல்லவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், அணையின் முன்பக்க கதவை பூட்டியும், வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பும் ஏற்படுத்தி உள்ளனர்.


Tags : Kobe ,areas ,terraces , Heavy rains , Kobe areas,submerged, Traffic Disruption
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...