×

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடிப்பு: ‘எங்கள் பிணத்தின் மீது வைத்து சான்றிதழை எரியுங்கள்’ என மனு

நெல்லை: நெல்லை மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தில் போலீசார் தங்களை டார்ச்சர் செய்வதாக கூறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றனர். ‘எங்கள் பிணத்தின் மீது சான்றிதழை போட்டு எரியுங்கள்’ என கலெக்டரிடம் அவர்கள் அளித்த மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.நெல்லை மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி (52) விவசாயி. இவரது மனைவி சபரியம்மாள் (46). இவர்களுக்கு பாலமுருகன்(28) என்ற மகன் மற்றும் முப்பிடாதி என்ற மகள் உள்ளனர். முப்பிடாதி 10ம் வகுப்பு படித்து விட்டு தற்போது வீட்டில் உள்ளார். மகன் பாலமுருகனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.பாலமுருகன் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக தெரிகிறது. இதையொட்டி அவரிடம் விசாரணை நடத்துவதற்காக கடையம் போலீசார் அடிக்கடி இவர்கள் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் போலீசார் குடும்பத்தினரை டார்ச்சர் செய்ததோடு, முப்பிடாதியின் 10ம் வகுப்பு சான்றிதழ், மாற்று சான்றிதழ்களை எடுத்துச் சென்று விட்டனராம்.போலீசார் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் மாடசாமி குடும்பத்தினர் மனமுடைந்தனர். இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்து நேற்று காலை மாடசாமி, தனது மனைவி சபரியம்மாள், மகள் முப்பிடாதி, மற்றும் இரு பேர குழந்தைகளோடு நெல்லை வந்தார்.

கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியில் மாடசாமி தனது இரு பேத்திகளுடன் அமர்ந்து கொண்டார். சபரியம்மாளும், முப்பிடாதியும் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில், ‘‘எங்கள் மகன் செயல்களுக்காக போலீசாரின் கெடுபிடி தாங்க முடியவில்லை. இனி நாங்கள் வாழ்வதை விட சாவது என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். எங்கள் உடல்கள் மீது போலீசார் பிடுங்கிச் சென்ற சான்றிதழை போட்டு எரியுங்கள்’’ என எழுதியிருந்தனர். இதை படித்த கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அங்கிருந்த போலீசாரிடம் இதுகுறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டனர். போலீசார் அவர்களை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் இருவரும் வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை குடித்தது தெரியவந்தது. உடனடியாக 108 ஆம்புலன்சில் ஏற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, சபரியம்மாள் ‘நாங்கள் மட்டும் விஷம் குடிக்கவில்லை. வெளியில் எனது கணவர் மாடசாமியும் விஷம் குடித்துவிட்டு பேத்திகளுடன் உள்ளார்’ என தெரிவித்துள்ளார். உடனடியாக போலீசார் மாடசாமியை கண்டுபிடித்து ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

கடையம் வீரத்தம்பதிகள் வீட்டு கொள்ளையில் தொடர்பு கடையம் அருகே கல்யாணிபுரத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி இரவு சண்முவேல் (70), செந்தாமரை (65) தம்பதி வீட்டில் புகுந்த இருவர், அரிவாளை காட்டி நகை பறிக்க முயன்றனர். ஆனால் தம்பதிகள் தங்கள் கையில் கிடைத்த நாற்காலி, மற்றும் பொருட்களை கொள்ளையர்கள் மீது வீசி விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த வழக்கில் கொள்ளையர்கள் 4 மாதங்களுக்கு பின்னரே சிக்கினர். இந்த வழக்கில் மாடசாமி மகன் பாலமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : persons ,Paddy Collector ,Office , Paddy ,Collector's Office, same family, poisoned
× RELATED கும்பகோணத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்