சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதல் டிரைவர் பலி; 48 பேர் படுகாயம்

இளம்பிள்ளை: சென்னையிலிருந்து, கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு கிளம்பியது. இந்த பஸ்சை, விருதுநகர் மாவட்டம் குன்னூரை சேர்ந்த பாஸ்கரன் (40) என்பவர் ஓட்டிவந்தார். இந்த பஸ் நேற்று அதிகாலை 2 மணியளவில், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே வந்தது. ஆ.தாழையூர் மேட்டு முனியப்பன் கோயில் பகுதியில் வந்த போது, டிரைவர் பாஸ்கரன் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளார். இதனால் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ், 10 அடி பள்ளத்தில் எதிர்புறம் உள்ள சாலையில் புகுந்தது. அப்போது ஈரோட்டில் இருந்து சேலம் வந்த தனியார் பஸ் மீது, ஆம்னி பஸ் வேகமாக மோதியது. இதில் தனியார் பஸ்சின் பின்னால் வந்த மினிவேனும் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இரு பஸ்களின் முன்புறமும் அப்பளம் போல நொறுங்கின. அப்போது, பஸ்சில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் காயம் அடைந்து அலறினர். இடிபாடுகளுக்குள் சிக்கிய ஆம்னி பஸ் டிரைவர் பாஸ்கரன், அதேஇடத்தில் உயிரிழந்தார். இதில், இரு பஸ்களிலும் இருந்த 48 பயணிகள் படுகாயமடைந்தனர்.  தகவலறிந்த மகுடஞ்சாவடி போலீசார், விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்களில் 26 பேர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கும், 21 பேர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால், சேலம்-கோவை நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: