தேசிய நீர் மேம்பாட்டு முகமை மூலம் 7,677 கோடியில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்: மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டு அறிக்கை சமர்ப்பிப்பு

சிறப்பு செய்தி: தேசிய நீர் மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் 7,677 கோடியில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டு தமிழக அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பருவமழை காலகட்டங்களில் மேட்டூர் அணையில் இருந்து பலநூறு டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. குறிப்பாக, கடந்தாண்டு மட்டும் மேட்டூர் அணையில் இருந்து 258 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆனால், அடுத்து வரும் மாதங்களில் வறட்சியின் கோரப்பிடியில் தமிழகம் சிக்கி தவிக்கிறது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவிரி-அக்னியாறு-தெற்கு வெள்ளாறு-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 2008ல் தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, 2008ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி கரூர் மாவட்டம் மாயனூர் கிராமம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு புதிய கதவணை கட்ட அப்போதைய முதல்வர் கலைஞர் அடிக்கல் நாட்டினார். இந்த தடுப்பணை 2014ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இத்திட்டத்தின் இரண்டாவது கட்டமாக காவிரி ஆற்றின் வெள்ள நீரை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு ஆகிய ஆறுகளுக்கு திருப்பி விடும் திட்டத்துக்கான அறிக்கை தயார் செய்யப்பட்டது.

 இந்த திட்டத்தின்படி 258 கி.மீ தூரம் கால்வாய் அமைக்க ₹5,166 கோடி தேவை என மதிப்பிடப்பட்டது. இதை தொடர்ந்து, மத்திய அரசின் வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ் நிதியுதவி கோரி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தது. ஆனால், அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பியது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற முடியாது என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, கடந்த 2014ல் பாஜ அரசு பொறுப்பேற்ற பின், இந்த திட்டத்திற்கு நிதி பெற மீண்டும் முயற்சி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்நிலையில், நில ஆர்ஜித சட்டம் கொண்டு வரப்பட்டதால், அந்த திட்டத்தின்படி நிதி கூடுதல் ஆகும் என்பதால் அதற்கேற்றவாறு அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, அரசு நிலங்கள் வழியாக இந்த திட்டத்தை கொண்டு செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின்படி ₹7,677 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

இந்த அறிக்கையை மத்திய அரசின் நிதியுதவியை பெறும் வகையில் தேசிய நீர் மேம்பாட்டு முகமையிடம் கொள்கை அளவில் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் தேசிய நீர் மேம்பாட்டு முகமை இறங்கியுள்ளது. எனவே, இந்த திட்டம் செயல்பாட்டில் வர காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை முன்கூட்டியே தொடங்க முடிவு செய்துள்ளோம் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் மத்திய அரசு 75%, மாநில அரசு 25% என்ற அடிப்படையில் மேற்கொள்ள உள்ளோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஏற்கனவே உள்ள 5,648 ஹெக்டேர் பாசன பரப்புகள் இணைக்கப்படுவதுடன், நீர் பற்றாக்குறையாக உள்ள அணைக்கட்டுகள்/ கண்மாய்களின் 14,600 ஹெக்டேர் பாசன பரப்பு உறுதி செய்யப்படும்’ என்றார்.

Related Stories:

>